திருப்போரூர் அரசு மகளிர் பள்ளியில் ஆங்கில வழி பிரிவு துவங்கப்படுமா?
திருப்போரூர்: திருப்போரூர் கிரிவலப் பாதையில், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி, கடந்த 2009ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.இதில், திருப்போரூர், கண்ணகப்பட்டு, காலவாக்கம், தண்டலம், ஆலத்துார், மடையத்துார், சிறுதாவூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட மாணவியர் பயில்கின்றனர்.ஒவ்வொரு ஆண்டும், இப்பள்ளி சராசரியாக 90 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்று வருகிறது. இங்கு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பில், ஆங்கில வழிக்கல்வியில், அறிவியல், வரலாறு போன்ற பாடப்பிரிவுகள் இல்லாததால், மாணவியர் பாதிக்கப்படுகின்றனர்.பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவியர், ஆங்கில வழியில் விரும்பும் பாடப்பிரிவுகள் இல்லாததால், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எங்கு சேர்வது என, குழம்பி நிற்கின்றனர்.எனவே, திருப்போரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஆங்கில வழியில் மேற்கண்ட புதிய பாடப்பிரிவுகள் துவங்க, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவியர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.