நீதித்துறையில் தொழில்நுட்ப பயன்பாடு; தலைமை நீதிபதி சந்திரசூட் பெருமிதம்
புதுடில்லி: நீதித்துறையில் தொழில்நுட்ப பயன்பாட்டினால் மிகப்பெரும் பலன் கிடைத்துள்ளது. 7.50 லட்சம் வழக்குகள், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக விசாரிக்கப்பட்டன. 1.50 லட்சம் வழக்குகள், ஆன்லைன் வாயிலாக பதிவு செய்யப்பட்டன என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.உலகின் பெரும் பொருளாதார நாடுகளின், ஜி - 20 அமைப்பின் தலைமை பொறுப்பை, தென் அமெரிக்க நாடான பிரேசில் இந்தாண்டு ஏற்றுள்ளது.ஆன்லைன்இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் இடையேயான ஜே-20 சந்திப்பு கூட்டம் நேற்று ரியோ டி ஜெனிரோவில் நடந்தது. இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பங்கேற்றார்.அதில் அவர் பேசியதாவது:டிஜிட்டல் தொழில்நுட்பங்களை சிறப்பாக பயன்படுத்துவது, நீதித் துறை செயல்பாடுகளை மேம்படுத்தியுள்ளது. இது பலதரப்புக்கும் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. கொரோனா பரவலின்போது, ஆன்லைன் வாயிலாக விசாரணை துவங்கியது. தற்போது நீதிமன்றங்களில் விவாதங்கள் நடத்தப்பட்டாலும், வீடியோ கான்பரன்ஸ் வசதியும் பயன்படுத்துகிறோம்.இந்தியாவில் இதுவரை, 7.50 லட்சம் வழக்குகளை, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக விசாரித்துள்ளோம்.இதுவரை, 1.5 லட்சம் வழக்குகள் ஆன்லைன் வாயிலாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் காகிதங்கள் பயன்பாட்டை குறைத்துள்ளோம்.உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பராமரிப்பு முறையானது, உலகின் மிகப்பெரிய வழக்கு நிர்வாகமாக அமைந்துள்ளது. அரசியலமைப்பு சட்ட வழக்குகள் விசாரணை, நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.முன்னேற்றம்இதைத் தவிர, நீதிமன்ற தீர்ப்புகள், 16 பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பதிவு செய்யப்படுகின்றன. இதுவரை, 36,000 வழக்குகள் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. இவ்வாறு டிஜிட்டல் மயமாக்கம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை முழுமையாக பயன்படுத்துவதால், நீதிமன்ற பணிகள் மேம்பட்டுள்ளன. நீதி வழங்குவதும் முன்னேறியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.