மதுரை எய்ம்ஸ் நிர்வாக குழுவில் ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி
சென்னை: மதுரை எய்ம்ஸ் நிர்வாக குழு உறுப்பினராக, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி நியமிக்கப்பட்டு உள்ளார்.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில், மத்திய அரசின், எய்ம்ஸ் மருத்துவமனை, 1,977.8 கோடி ரூபாய் மதிப்பில், 222 ஏக்கரில் கட்டப்படுகிறது.இதில், 82 சதவீதம் நிதி தொகையான 1,627.70 கோடி ரூபாயை, ஜப்பான் நாட்டில் ஜைக்கா நிறுவனம் மத்திய அரசுக்கு கடனாக வழங்குகிறது. மீதமுள்ள, 18 சதவீதம் தொகையை, மத்திய அரசு நேரடியாக கொடுக்கிறது.இதற்கான கட்டுமான பணியை, எல்., அண்டு டி., நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இரு கட்டங்களாக, 33 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் நிர்வாக குழு உறுப்பினராக, சென்னை ஐ.ஐ.டி., உயர் கல்வி நிறுவன இயக்குனர் காமகோடி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.இதுகுறித்து, மத்திய அரசு அரசிதழில், மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், மதுரை எய்ம்ஸ் நிர்வாக குழு உறுப்பினராக, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் நியமிக்கப்படுகிறார். அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவன சட்ட விதிகளின்படி, இந்த நியமனம் செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.