மாற்றுத்திறன் மாணவரையும் சாதிக்க வைக்க வேண்டும்: சி.இ.ஓ., வலியுறுத்தல்
மதுரை : மதுரையில் விளையாட்டு, கலைத்திருவிழா போட்டிகளில் மாற்றுத்திறன் மாணவர்களையும் அதிகளவில் சாதிக்க வைக்க வேண்டும் என சி.இ.ஓ., கார்த்திகா தெரிவித்தார்.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் டி.இ.ஓ.,க்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள். வளமைய மேற்பார்வையாளர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை மருத்துவர்களுக்கான மாவட்ட ஆய்வு கூட்டம் (டி.பி.எல்.சி.,) சி.இ.ஓ., தலைமையில் நடந்தது. உதவி திட்ட அலுவலர் சரவணமுருகன் முன்னிலை வகித்தார்.சி.இ.ஓ., பேசியதாவது: மாற்றுத்திறன் மாணவர்களை கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க வேண்டும். அவர்கள் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு சென்றுள்ளனரா என உறுதி செய்ய வேண்டும். அறிவுசார் குறைபாடுள்ள மாணவர்களுக்கு முதல் பருவ எண்ணும் எழுத்தும் புத்தகங்கள் வழங்கி அவற்றை எமிஸில் பதிவேற்றம் செய்ய வேண்டும். விளையாட்டு, கலைத் திருவிழா போட்டிகளில் மாற்றுத்திறன் மாணவர்களை அதிகம் பங்கேற்க செய்து சாதனை படைக்க செய்ய வேண்டும். மாவட்டத்தில் 216 மாணவர்களுக்கு தனித்துவ அடையாள அட்டை, 227 மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு பேசினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சூர்யகலா ஒருங்கிணைத்தார்.