சி.பி.எஸ்.இ.,க்கு தேர்வு கட்டணம் நிதி ஒதுக்க அரசுக்கு வலியுறுத்தல்
புதுச்சேரி: சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் உரிமை கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.இது குறித்து கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரியில் அரசு 10, பிளஸ்2 வகுப்பு மாணவர்கள் தேர்வு விண்ணப்ப தொகையை பல ஆண்டாக ரூ.235 வீதம் தமிழக அரசுக்கு செலுத்தி வந்தது.தற்போது சி.பி.எஸ்.இ., பாடத்தில் 5 பாடங்களுக்கு தேர்வுக் கட்டணம் 1,500 ரூபாய், கூடுதல் பாடத்திற்கு ரூ.300, செய்முறை தேர்வுக் கட்டணம் தலா ரூ.150, அக்டோபர் 5ந் தேதிக்குப்பின் தாமத கட்டணம் ரூ.2 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.புதுச்சேரி கல்வித்துறை இணை இயக்குநர் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழக்கமாக அரசு செலுத்தும் தேர்வுக்கட்டணம் குறித்து எவ்வித முன்னேற்பாடும் செய்யவில்லை. விண்ணப்பிக்கும் வரும் 4ம் தேதி கடைசி நாள். ரூ.2 கோடிக்கு மேல் அரசு செயலர், தலைமை செயலர் ஒப்புதல் பெற வேண்டும்.இதனால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே கவர்னர், முதல்வர், கல்வி அமைச்சர், தலைமைச் செயலர், கல்வித்துறை செயலர் இதில் தலையிட்டு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து தேர்வுக்கட்டணம் செலுத்தி, மாணவர்கள் எவ்வித மன உளைச்சலும் இல்லாமல் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.