உள்ளூர் செய்திகள்

கல்லுாரி, பல்கலைகளில் அதிகரிக்கும் சங்கிகள் நடமாட்டம்: உதயநிதி ஆவேசம்

சென்னை: சங்கிகள் இன்று நாடு முழுதும் கல்வித் துறையை காவி மயமாக்க நினைக்கின்றனர். கல்லுாரிகள், பல்கலைகளில், சங்கிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்கம் துவக்க விழா, நேற்று சென்னையில் நடந்தது. சங்கத்தின், லோகோவை வெளியிட்டு, துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது:சங்கிகள் இன்று நாடு முழுதும் கல்வித் துறையை, காவி மயமாக்க நினைக்கின்ற நிலையில், இந்த சங்கம் துவக்குவது அவசியமான செயல். படித்தவர்களை ஒரு கொள்கையை ஏற்க வைப்பது சவாலானது. படித்த நீங்கள் திராவிட இயக்க கருத்துக்களை ஏற்றுக் கொண்டது, அந்த கருத்து எவ்வளவு வலிமையானது என்பதை காட்டுகிறது.திராவிடம் என்ற வார்த்தையை கேட்டால், இன்றும் சில சங்கிகளுக்கு அலர்ஜி; அலறி கொண்டு வருகின்றனர். இன்று கல்லுாரிகள், பல்கலைகளில், சங்கிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மாநிலங்களுக்கு கவர்னர் வருவர் என எதிர்பார்த்தோம். ஆனால், கவர்னருக்கு பதிலாக, ஆரியனர்கள் வருகின்றனர். கவர்னர் வேலையை பார்ப்பதற்கு பதிலாக, பல்கலை வளாகங்களில் சங்கிகளை உருவாக்குகின்றனர்.இங்கு ஒரு ஆரியனர் உள்ளார். திராவிட இயக்கம் பல ஆண்டு பாடுபட்டு, கல்லுாரி, பல்கலை துவக்கியது. அங்கு சென்று சங்கி கருத்துக்களை பரப்புகிறார். அவருக்கு தமிழ்நாடு என்ற வார்த்தை பிடிக்காது. திராவிடம், தமிழ்த்தாய் வாழ்த்து பிடிக்காது. அவருக்கு பிடித்தது, மன்னிச்சிருங்க என்பதுதான்.இதையெல்லாம், அண்ணாவையும் திராவிடத்தையும் கட்சி பெயரில் வைத்துள்ள அடிமைகள், என்றைக்காவது கண்டித்துள்ளனரா; அவர்களுக்கு எதுவும் தெரியாது. திராவிடத்திற்கு அர்த்தம் தெரியாதவர், அந்த கட்சி தலைவர். அந்த கால சங்கிகள் மட்டுமல்ல, இப்போது உள்ள சங்கிகளும், நம் கல்வியை தடுக்கின்றனர். நாம் மாணவர்களை உயர் கல்விக்கு கொண்டு வர முயற்சிக்கிறோம். சங்கிகள் விரட்டி அடிக்க முயற்சிக்கின்றனர். மத்திய அரசு விஸ்வகர்மா திட்டம் கொண்டு வந்துள்ளது. குடும்ப தொழிலை கொண்டு வந்து, அவர்கள் படிப்பை தடுக்கும் திட்டம் அது.வங்கி கடன் வாங்கியாவது, உயர் கல்வி படி என்பது திராவிடம். குல தொழில் செய்ய கடன் தருகிறேன்' எனக் கூறுவது ஆரியம். பிற்போக்குத்தனமான திட்டங்ளை கொண்டு வந்து, அதை நிறைவேற்றும்படி, மாநில அரசுக்கு, மத்திய அரசு நெருக்கடி கொடுக்கிறது. இதை நிறைவேற்றாத மாநிலங்களுக்கு, மத்திய அரசு நிதி ஒதுக்குவதில்லை. இதற்கு மத்தியில், நம் அரசு மாணவர்களுக்கு அடுக்கடுக்கான திட்டங்களை செயல்படுத்துகிறது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்