உள்ளூர் செய்திகள்

மொழிபெயர்ப்பில் விழி பிதுங்கும் தமிழ்; கூகுளை நம்பும் அதிகாரிகளால் குழப்பம்!

சென்னை: தமிழக அரசுக்கு சொந்தமான கன்னிமாரா நுாலகத்தை கொன்னமர நுாலகம் என்றும், அதிக தகவல்கள் குவித்துள்ளதை குறிப்பிடும், ரிச் ரிப்போசிட்டரி என்பதை, பணக்கார களஞ்சியம் என்றும் மொழி பெயர்ப்பு செய்து, தமிழக அருங்காட்சியகங்கள் துறை, தன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.தமிழக அரசு அருங்காட்சியகங்கள் துறையின் கீழ், சென்னை, எழும்பூர் அருங்காட்சியகம் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 1851ம் ஆண்டு, பிரிட்டிஷாரால் எழுப்பப்பட்ட இது, நாட்டின் பழமையான அருங்காட்சியகங்களில் இரண்டாவதாக உள்ளது. இங்கு, பழங்கால தென்மாநில மக்களின் கலைகள், வாழ்வியல் முறைகள், தொல்லியல் எச்சங்கள், நாணயங்கள், சிலைகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. தவிர, இதன் வளாகத்தில் புகழ்பெற்ற பொது நுாலகமான கன்னிமாரா நுாலகமும் உள்ளது.புகழ்பெற்ற இந்த அருங்காட்சியகத்திற்கு வந்த, வெளிநாட்டில் வசிக்கும் தமிழ் ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது: எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள சிற்பக்கூடத்துக்கு சென்றிருந்தேன். அவற்றுக்குள் வைக்கப்பட்டிருந்த குறிப்புகளை பார்க்கும்போது தலை சுற்றியது. அதாவது, ஆங்கிலத்தில் உள்ள குறிப்புகளுக்கு தகுந்தாற்போல், தமிழில் மொழிபெயர்க்காமல், கூகுள் டிரான்ஸ்லேட் செய்து, அதை அச்சடித்து வைத்துள்ளனர். அதில் உள்ள எந்த வாக்கியமும் முழுமை பெறவில்லை.தொல்லியல் துறை சார்ந்த தகவல்களையும், வார்த்தைகளையும் பொதுமக்கள் புரிந்துகொள்வது கடினம். அவர்களுக்கு எளிய தமிழில் தகவல்களை தரவேண்டிய அருங்காட்சியகங்கள் துறை, தமிழை குத்தி, குதறி, கொலை செய்து உள்ளது.அதேபோல், அருங்காட்சியங்கள் துறையின், https://chennai.nic.in/tourist-place/government-museum/ என்ற இணையதளத்திலும், தமிழ் பகுதியில், ஆட்டோ கூகுள் டிரான்ஸ்லேட் செய்யப்பட்டுள்ளது.அதில், அனைத்து வகையான அருங்காட்சியக துறைகள் இருப்பதை குறிப்பிடும் வகையில், ரிச் ரிப்போசிட்டரி என்பதை பணக்கார களஞ்சியம் என்றும், கன்னிமாரா நுாலகத்தை, கொன்னமர நுாலகம் என்றும் அப்பட்டமாக, இல்லாத ஒன்றை மொழி பெயர்க்கிறது.இதை படிக்கும் வெளிநாடுவாழ் தமிழர்கள் மட்டுமல்ல, தாய்த்தமிழக மக்களே குழம்புவது நிச்சயம்.தமிழை காப்பதாக சொல்லிக்கொள்ளும் தி.மு.க., அரசு, இதை கவனிக்காதது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்