கம்யூ., தலைவர் ஜெயராஜனின் சுயசரிதை புத்தக வெளியீடு நிறுத்தத்தால் சர்ச்சை
திருவனந்தபுரம்: கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைவர் இ.பி.ஜெயராஜனின் சுயசரிதை புத்தகம் நேற்று வெளியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அது திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் இ.பி.ஜெயராஜன், கட்டஞ்சாயாவும் பருப்புவடையும் - ஒரு கம்யூனிஸ்டின் வாழ்க்கை என்ற பெயரில் தன் சுயசரிதையை புத்தகமாக எழுதி உள்ளார்.இந்த புத்தகம் நேற்று வெளியிடப்படும் என, அதன் பதிப்பகத்தார் அறிவித்து இருந்தனர். ஆனால், புத்தகம் வெளியாகவில்லை. மாறாக அதில் ஜெயராஜன் தன் கட்சி தலைமை மீதான அதிருப்தி குறித்த கருத்துகளை தெரிவித்துள்ளதாக கேரள ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டன.குறிப்பாக, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியது குறித்தும், பாலக்காடு சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரசின் முன்னாள் நிர்வாகி சரினை சுயேச்சையாக கட்சி தலைமை களமிறக்கியது வருத்தம் அளித்தது பற்றியும், சுயசரிதை புத்தகத்தில் ஜெயராஜன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.வயநாடு லோக்சபா தொகுதி மற்றும் செலக்காரா சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நடந்த நேற்று, இந்த தகவல் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவ்வாறு வெளியிடப்பட்ட தகவல்கள் தன் சுயசரிதையில் இடம்பெறவில்லை என, இ.பி.ஜெயராஜன் மறுத்துள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக உள்ள ஜெயராஜன், பா.ஜ.,வில் சேர உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, இடது ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து கடந்த மே மாதம் நீக்கப்பட்டார்.கட்சி தலைமை மீது அவர் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், தன் சுயசரிதை புத்தகத்தை ஜெயராஜன் வெளியிட உள்ளார்.