தகுதியானவர்களுக்கு குடியரசு தின விருது கல்வித்துறையில் எதிர்பார்ப்பு
மதுரை: கல்வித்துறையில் இந்தாண்டாவது சர்ச்சைக்கு இடமின்றி தகுதியான ஆசிரியர்கள், அலுவலர்கள் குடியரசு தின விருதுக்கு தேர்வு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆண்டுதோறும் சுதந்திரம், குடியரசு தின விழாக்களின் போது துறைவாரியாக சிறப்பாக பணியாற்றி அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விருது, சான்றிதழ் வழங்கி கலெக்டர் கவுரவிப்பார். கல்வித்துறையில் இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள், தலைமையாசிரியர், அலுவலர்கள், திட்டப் பணிகளில் உள்ளோர் என உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டு 10க்கும் மேற்பட்டோருக்கு விருது வழங்கப்பட்டது. ஆனால் கடந்தாண்டு 4 பேர் மட்டும் விருது பெற்றனர். இரண்டு ஆண்டுகளாக சிபாரிசு அடிப்படையில் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு, தகுதி உள்ளோர் புறக்கணிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. எனவே இந்தாண்டு தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆசிரியர், அலுவலர்கள் கூறியதாவது: இவ்விருது பணி அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம். பொதுவாக அதிகாரிகள் மனது வைத்தால் தான் விருதுக்கு தேர்வாக முடியும் என்ற நிலைமை உள்ளது. இதனால் தகுதி இருந்தும் பலர் பரிசீலிக்கப்படுவதில்லை. இந்த நிலையை தற்போதைய சி.இ.ஓ., ரேணுகா மாற்றி ஆசிரியர் - அலுவலர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளித்து தகுதியானவர்களை தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். விருதுக்கு தேர்வு செய்வோரின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என்றனர்.