குழந்தைகளுக்கு முழுமையான கல்வி அவசியம் மக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
பொள்ளாச்சி : பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் பள்ளிப் படிப்பை முடித்தவுடன், கட்டாயமாக உயர் கல்வி பயில்வதற்கும் அனுப்ப வேண்டும் என கோவை கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தினார்.குடியரசு தினத்தை முன்னிட்டு, பொள்ளாச்சி அருகே ஒக்கிலிப்பாளையம் ஊராட்சியில் நடந்த, கிராம சபை கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக கலெக்டர் கிராந்திகுமார் கலந்து கொண்டார்.கிராம சபையில் கலெக்டர் பேசியதாவது:பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் பள்ளிப்படிப்பை முடித்தவுடன், கட்டாயமாக உயர் கல்வி பயில்வதற்கு அனுப்ப வேண்டும். கோவை மாவட்டத்தில், திறமை, படிப்புக்கு ஏற்றாற்போல் வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன.இதேபோல, ஐ.டி.ஐ., முடிப்போருக்கும் அதிகமான வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் உள்ளன. பெண்கள் ஒவ்வொருவரும், தங்களின் பொருளாதார தேவையை பூர்த்தி செய்ய உயர்கல்வி பயில்வது அவசியம்.இதேபோல, பெண்கள் ஒன்றிணைந்து மகளிர் சுய உதவிக் குழுகளில் சேரலாம். அதன் வாயிலாக பெறப்படும் கடனுதவிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் நலன் கருதி கல்வி கடன் வழங்கும் முகாம் நடத்தப்பட்டும் வருகிறது. மக்களுடன் முதல்வர் திட்டம், இரு கட்டங்களாக முடிவு பெற்று, மூன்றாம் கட்டமாக மனுக்கள் பெறபடவும் உள்ளன.இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து மக்களிடம் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.சப்-கலெக்டர் கேத்தரின் சரண்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மதுரா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கமலக்கண்ணன், பி.டி.ஓ.,க்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.தலைகள் இல்லைதமிழகத்தில், ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஊராட்சி தலைவர்கள் இல்லாமல் செயல் அலுவலர்களால் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மக்களுக்கு தேவையான அடிப்படைத் தேவைகள் குறித்து பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 34 ஊராட்சிகள் உள்ளன. இங்கு நடந்த கிராம சபை கூட்டத்தில், 546 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், 2,405 ஆண்கள் மற்றும் 2,934 பெண்கள் என, மொத்தம் 5,340 பேர் பங்கேற்றனர்.ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள 19 ஊராட்சிகளில், 354 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், 1,588 ஆண்கள் மற்றும் 1,949 பெண்கள் என மொத்தம், 3537 பேர் பங்கேற்றனர்.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் உள்ள 26 ஊராட்சிகளில், 425 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், 2,228 ஆண்கள் மற்றும் 2599 பெண்கள் என மொத்தம் 4,827 பேர் பங்கேற்றனர். வடக்கு ஒன்றியத்தில் உள்ள, 39 ஊராட்சிகளில், 663 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், 2,722 ஆண்கள் மற்றும் 3,339 பெண்கள் என மொத்தம் 6,061 பேர் பங்கேற்றனர்.உடுமலையில் 783 தீர்மானங்கள்உடுமலை ஒன்றியத்தில், 38 கிராம ஊராட்சிகள் உள்ளன. குடியரசு தினத்தையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடந்தது.கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியில் தணிக்கை அறிக்கை, டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து பேசுவது, மக்கள் திட்டமிடல் இயக்கம் வாயிலாக, 2025-26 நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சி திட்டத்துக்கு ஒப்புதல் பெறுதல் உட்பட 783 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பி.டி.ஓ.,க்கள் சுரேஷ்குமார், சிவகுருநாதன் குறிஞ்சேரி ஊராட்சியில் நடந்த கிராம சபைக்கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டங்களில், ஆண்கள் 3,041, பெண்கள், 3,630 உட்பட மொத்தமாக, 6,671 பேர் பங்கேற்றனர்.