அரையாண்டு தேர்வு விடுமுறை சிறப்பு வகுப்புகள் நடத்த தடை
பெ.நா.பாளையம்: அரையாண்டு தேர்வு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் வட்டார அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:பள்ளிக்கல்வி இயக்குனர், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள், அரையாண்டு விடுமுறை காலத்தில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து உத்தரவு அனுப்பி உள்ளார். அதில், அரையாண்டு தேர்வு முடிந்த பிறகு டிச., 24 முதல் ஜன., 4 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.ஜன., 5ம் தேதி திங்கட்கிழமை முதல் பள்ளிகள் வழக்கம் போல செயல்படும். அரையாண்டு விடுமுறை நாட்களில், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டாம் என, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பள்ளி விடுமுறை நாட்களில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய நடவடிக்கைகள் குறித்தும், அதில், குறிப்பிடப்பட்டுள்ளது.மாணவர்கள் விடுமுறை நாட்களில் கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர் நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது. மாணவர்களின் வளர்ச்சிக்கு சமச்சீரான உணவு அளிப்பது அவசியம். இசை, நடனம் மற்றும் ஓவியம் போன்றவற்றில் ஆர்வமுள்ள மாணவர்களை, விடுமுறை நாட்களில் அவற்றை கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கலாம்.தாத்தா, பாட்டி உள்ள வீடுகளில் அவர்களுடன் சேர்ந்து உணவு அருந்த ஊக்குவிக்கவும், மேலும், பெரியோர்களை மதிக்கவும், அவர்களுக்கு உதவி செய்யவும், குழந்தைகளை பழக்க வேண்டும் என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும், இது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.