உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் பயிற்சி பள்ளி வசூல் தமிழக அரசு கடும் எச்சரிக்கை

சென்னை: ‘அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம், ஐகோர்ட்  நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இந்தப் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து, ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆசிரியர் பயிற்சி கட்டணம் தொடர்பான வழக்கில், கவுன்சிலிங் மூலம் ஒதுக்கீடு பெற்று சுயநிதி தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் சேரும் மாணவ, மாணவிகளிடம் கட்டணமாக 23 ஆயிரம் ரூபாய் மட்டும் பெற வேண்டும் என இடைக்கால உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக பெறக்கூடாது; இந்தத் தொகை, வழக்கில் கூறப்படும் இறுதித் தீர்ப்புக்கு  உட்பட்டது. ‘கூடுதலாக கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு உரிமை இல்லை. அப்படி வசூலித்தால் உரிய சட்ட விதிகளின்படி சம்பந்தபட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஆசிரியர் பயிற்சி இயக்குனரகத்திற்கு இருக்கிறது’ என, ஐகோர்ட் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பல மாணவர்களிடம் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகார் மனுக்கள் கிடைத்துள்ளன. சம்பந்தபட்ட பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கூடுதலாக வசூலித்த தொகையை உடனடியாக மாணவர்களுக்கு திருப்பித் தர வேண்டும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்