உள்ளூர் செய்திகள்

அறிவியலை விரும்பினால் பயோடெக்னாலஜி - உதவி பேராசிரியர் குருமூர்த்தி

"அறிவியலை விரும்பும் மாணவர்கள் பயோடெக்னாலஜியை தேர்வு செய்யலாம்" என தினமலர் எஸ்.ஆர்.எம். பல்கலை இணைந்து வழங்கிய, மதுரை "வழிகாட்டி" நிகழ்ச்சியில், எஸ்.ஆர்.எம். பல்கலை உதவி பேராசிரியர் குருமூர்த்தி தெரிவித்தார். "பயோடெக்னாலஜி மற்றும் பயோ இன்ஜினியரிங்" படிப்புகள் குறித்து அவர் பேசியதாவது: பயோடெக்னாலஜி துறை இந்தியாவில் 1940 லிருந்து பரவலாக இருக்கிறது. 1970ல் இப்பெயரிடப்பட்டது. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான துறை இது. வேளாண்மை, மருத்துவம், சுற்றுச்சூழல், சட்டம், உணவு பதப்படுத்துதல் ஆகிய பாடங்களை படிப்பதால், இத்துறைகளின் கீழும் பணிவாய்ப்பும் கிடைக்கிறது. சமீபத்திய "ஸ்டெம் செல்&' ஆராய்ச்சிக்கு கூட இத்துறை பயன்படுகிறது. பல்வேறு மருந்துகளின் கூறுகளைக் கண்டறிந்து, அவற்றிலிருந்து புதிய மருந்து கண்டுபடிக்கவும் பயன்படுகிறது. மருத்துவத்தைப் பொறுத்தவரை இருதய வால்வுகளின் செயல்பாடுகளைக் கண்டறிவதில் மிகப்பெரிய பங்காற்றுகிறது. பயோடெக்னாலஜியில் மரபணு பொறியியல், உயிர் தகவலியல், உயிர் மருத்துவப் பொறியியல், உணவுப் பதப்படுத்தும் பொறியியல் படிப்புகள் உள்ளன. அறிவியல் துறைகளில் ஆர்வமுள்ளவர்கள் இப்படிப்புகளை தேர்ந்தெடுக்கலாம். உயிர் மருத்துவப் பொறியியல் துறை மூலம் மருத்துவ உபகரணங்களை புதிதாக கண்டுபிடிக்கலாம். செயற்கை கை, கால், மனித உறுப்புகளை தயாரிக்க முடியும். இந்தியாவில் பயோடெக்னாலஜி துறை கடந்தாண்டு 17 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. ஏற்றுமதியில் 35 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேற்படிப்பு, ஆராய்ச்சி செய்ய விரும்பும் மாணவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் கல்வி உதவித்தொகை வழங்குகின்றன என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்