மாவட்ட நுாலக கட்டடம் கட்டுவது எப்போது?: ஒதுக்கிய ரூ.6 கோடி நிதி என்ன ஆனது?
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாவட்ட மைய நுாலகத்திற்கு சொந்த கட்டடம் கட்டுவதற்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கப்பட்ட ரூ.6 கோடி நிதி என்ன ஆனது என பொதுமக்கள் தரப்பில் கேள்வி எழுந்துள்ளது.கள்ளக்குறிச்சியில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் நுாலகம் துவங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை சொந்த கட்டடம் இல்லாமல், தனியார் கட்டடத்திலேயே இயங்கி வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள், 500க்கும் மேற்பட்ட புரவலர்கள் பயனாளர்களாக உள்ளனர்.சில ஆண்டுகளுக்கு முன் நுாலகத்திற்கு சொந்த கட்டடம் கட்ட அரசு மகளிர் பள்ளி அருகே 15 சென்ட் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் கட்டடம் கட்டப்படாமலேயே இழுபறி நிலை நீடித்தது.இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கடந்த 2019ல் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட நிலையில் அத்துடன் அறிவிக்கப்பட்ட 6 புதிய மாவட்டங்களுக்கும் மாவட்ட நுாலகம் அமைக்க கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தலா 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.கள்ளக்குறிச்சியை தவிர மற்ற இடங்களில் மாவட்ட மைய நுாலகங்கள் கட்டப்பட்ட நிலையில் கள்ளக்குறிச்சியில் அதற்கான இடம் கிடைக்காமல் இழுபறி நிலையிலேயே நுாலக கட்டட கனவு நீடித்து வருகிறது. இதற்காக ஒதுக்கப்பட்ட 6 கோடிக்கு நிதி என்ன ஆனது என தெரியவில்லை.கள்ளக்குறிச்சி நகர பகுதிக்குள் இதற்கான 35 சென்ட் இடம் இருந்தால் மட்டுமே நுாலக கட்டடம் கட்டும் பணிகள் துவங்க முடியும் என்பதால், இடமே இல்லை எனக்காரணம் கூறி, கள்ளக்குறிச்சி மாவட்ட நுாலகம் கட்டுவதற்கான எந்த ஒரு பணியும் துவங்கவில்லை.எனவே கள்ளக்குறிச்சியில் மாவட்ட நுாலகத்திற்கு நிர்ந்தர கட்டடம் கட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.