நிகர்நிலை பல்கலைகள் குறித்து மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்!
நிகர்நிலை பல்கலைக் கழகங்களை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரமும், மாணவர் சேர்க்கை, அவர்கள் செலுத்த வேண்டிய கட்டணம் மற்றும் கல்வியின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய, மாநில அரசுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்ருக்கு முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதிய மருத்துவக் கல்லூரி துவங்க, மாநில அரசிடமிருந்து இன்றியமையாச் சான்றிதழ் பெற்றாலும், இக் கல்லூரிகளின் இடங்கள் எண்ணிக்கையை இந்திய மருத்துவக் கவுன்சில் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய சுகாதாரத் துறை தான் நிர்ணயம் செய்து அனுமதியளிக்கிறது. மாநில அரசிடமிருந்து இன்றியமையாச் சசான்றிதழ் அல்லது பரிந்துரை பெறாமலேயே தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நிகர்நிலை பல்கலைக் கழக அந்தஸ்தை மத்திய அரசு வழங்கி விடுகிறது. சமீபத்தில் செட்டிநாடு மருத்துவக் கல்லூரிக்கு மாநில அரசின் பரிந்துரை எதுவும் இல்லாமல், நிகர்நிலை பல்கலைக் கழக அந்தஸ்தை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை வழங்கியுள்ளது. இதனால், மாநில அரசின் ஒதுக்கீட்டிற்கு வர வேண்டிய 83 மருத்துவ இடங்கள் கிடைக்காமல் போய்விட்டது. இது சம்பந்தமாக முதல்வர், நிகர்நிலை பல்கலைக் கழகங்களை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரமும், மாணவர் சேர்க்கை, அவர்கள் செலுத்த வேண்டிய கட்டணம் மற்றும் கல்வியின் தரம் ஆகியவற்றை உறுதி செசய்ய மாநில அரசுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். பொறியியல் மாணவர் சேர்க்கையில், கடந்த 14ம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் இதுவரை 5,880 எஸ்.சி., 120 எஸ்.டி., மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த தேதியில், எஸ்.சி., பிரிவில் அரசு ஒதுக்கீட்டில் 8,868 இடங்கள் காலியாக உள்ளன. மூன்றாம் கட்ட கவுன்சிலிங்கிற்கு மீதமுள்ள 8,189 எஸ்.சி., மாணவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். எனவே, விண்ணப்பித்துள்ள அனைத்து எஸ்.சி., மாணவர்களுக்கும் முழுமையாக இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த 14ம் தேதி, காலியாக உள்ள 674 எஸ்.டி., இடங்களில் 202 எஸ்.சி., விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் அனைவருக்கும் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த 2005-06ம் ஆண்டில் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் 4,813 பேர் பொறியியல் கல்லூரிகளில் சேசர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு 8,383 எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இது மிகப்பெரிய வளர்ச்சி என்பதை யாராலும் மறுக்க முடியாது. கடந்த 2005-06ம் ஆண்டில், 236 தனியார் பொறியியல் கல்லுõரிகள் இருந்தன. 2008-09ம் ஆண்டில், 344 பொறியியல் கல்லூரிகளாக அதிகரித்துள்ளன. தனியார் பொறியியல் கல்லூரிகளைத் தொடங்க, மாநில அரசின் தடையில்லாச் சான்றிதழ் தேவையில்லை என கடந்த 2006ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அதே சமயம், அதிக எண்ணிக்கையில் தனியார் பொறியியல் கல்லூரிகள் வந்துள்ளதால் தான், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 2005-06ம் ஆண்டு வரை அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழக கல்லூரிகள் 14 ஆக இருந்தன. இன்றைக்கு அது 20 ஆக உயர்ந்துள்ளன. இதன்மூலம், அதிகளவில் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பொன்முடி கூறியுள்ளார்.