உள்ளூர் செய்திகள்

பாரதியார் பல்கலை வளாகத்தில் ‘பர்த் டே கார்டன்’ திறப்பு

கோவை: “பாரதியார் பல்கலை வளாகத்தில் மாணவியரின் வசதிக்காக, செப்., இறுதிக்குள் அழகு நிலையம் அமைக்கப்படும்,” என, துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்தார். கோவை பாரதியார் பல்கலையில் அமைக்கப்பட்டுள்ள மாணவர் சேவை மையத்தில்  பாங்க் ஆப் இந்தியா, தபால் நிலையம், மகளிர் சேவை மையம் இடம்பெற்றுள்ளன. மேலும், பயண டிக்கெட் மையம், வீடியோ ஸ்டூடியோ ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சேவை மையம் துவக்க விழா, பல்கலையில் ஆகஸ்ட் 28ம் தேதி நடந்தது. பயண டிக்கெட் வழங்கும் மையத்தை கோவை விமான நிலைய இயக்குனர் ஹேமலதா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பாங்க் ஆப் இந்தியாவின் கிளையை பல்கலை துணைவேந்தர் திருவாசகம், மகளிர் சேவை மையத்தை வடவள்ளி பேரூராட்சி தலைவர் அமிர்தவல்லி, தபால் நிலையத்தை கோவை மண்டல வனப்பாதுகாவலர் கண்ணன், வீடியோ, ஆடியோ மையத்தை தூர்தர்சன் தொலைக்காட்சி இயக்குனர் அனந்தநாராயணன் ஆகியோர் திறந்து வைத்தனர். பின், துணைவேந்தர் திருவாசகம் பேசியதாவது:பாரதியார் பல்கலையில் 36 துறைகள் உள்ளன. ஆயிரத்து 820 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இதில் 1,400 பேர் விடுதியில் தங்கி படிக்கின்றனர். 145 ஆசிரியர்கள், 40 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றுகின்றனர். பல்கலையில் இருந்து நகரத்தில் ஏதேனும் பொருட்கள் வாங்க வேண்டுமெனில்  10 கி.மீ., செல்ல வேண்டும். இதைக்கருத்தில் கொண்டு பல்கலை வளாகத்தில் மாணவர் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. பல்கலையில் வெளிநாட்டைச் சேர்ந்த நூறு மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு மாணவர் சேவை மையம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல்கலை வளாகத்தில் செப்., இறுதிக்குள் மாணவியருக்காக அழகு நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்கலை வளாகத்தில் நான்கு ஏக்கர் பரப்பளவில் ‘பர்த்டே கார்டன்’  திறக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர்  பிறந்தநாளன்று, கார்டனில் மரம் நடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு துணைவேந்தர் திருவாசகம் பேசினார். பாங்க் ஆப் இந்தியாவின் கோவை மண்டல மேலாளர் முனிர் ஆலம் பேசுகையில், “பாங்க் ஆப் இந்தியா, 60 ஆயிரம் மாணவர்களுக்கு கல்விக்கடன் அளித்துள்ளது. கோவை மண்டலத்தில் மட்டும் 500 மாணவர்களுக்கு ரூ.70 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது,” என்றார். கோவை மண்டல வனப்பாதுகாவலர் கண்ணன் பேசுகையில், “ பர்த்டே கார்டனில் மரம் நடவுள்ள மாணவ,மாணவியர், தங்களது ராசி, நட்சத்திரங்களைப் பற்றி தெரிவித்தால், அதற்கேற்ப மரக்கன்றுகளை வனத்துறை சார்பில் வழங்குவோம்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்