உள்ளூர் செய்திகள்

பொதுத்தேர்வு சாதனை மாணவ, மாணவியருக்கு ‘லேப்-டாப்’ பரிசு

ராஜா அண்ணாமலைபுரம் இமேஜ் அரங்கில் 29ம் தேதி நடந்த இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின், மாணவ மாணவிகளுக்கு ‘லேப்-டாப்’களை வழங்கினார். தொடர்ந்து மாநகராட்சி பள்ளிகளில் படித்து மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் பட்டப்படிப்புகளில் சேர்ந்து படிக்கும் மாணவ, மாணவிகளில், தரவரிசையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் நிதியுதவி வழங்கப்பட்டது. பாடப்பிரிவுகளில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும், பிளஸ் 2 தேர்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்ற 152 மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது: நான் மேயராக பொறுப்பேற்ற சமயத்தில் மாநகராட்சியில் குறிப்பாக கல்வித்துறை மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. அப்போது தி.நகரில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் மூப்பனார், கல்வித் துறைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என அறிவுரை கூறினார். ஓராண்டுக்கு பிறகு நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மூப்பனார், மாநகராட்சி பள்ளிகளின் கல்வித்தரம் உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டி பாராட்டினார். நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதுபோல் தற்போது இந்த நிகழ்ச்சியில், 1,510 மாணவ மாணவிகளுக்கு பல்வேறு வகைகளில் 30 லட்சத்து 29 ஆயிரத் 750 ரூபாய் அளவுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது. மாணவ, மாணவிகளை ஊக்குவிப்பதோடு, ஆசிரியர்களையும் ஊக்குவிக்க பரிசு வழங்கப்படுகிறது. மாநகராட்சி பள்ளிகளின் கல்வித்தரம் மேம்பாடு அடைய 248 பள்ளிகளிலும் ஆயிரத்து 945 ஆசிரியர்களுக்கு ‘எல்காட்’ நிறுவனத்தின் மூலம் கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் ஸ்டாலின் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மேயர் சுப்ரமணியன், கமிஷனர் ராஜேஷ் லக்கானி, ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சித் தலைவர் சைதை ரவி மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்