எழுத்தறிவுதான் சிறந்த நிவாரணம்: உலக எழுத்தறிவு தின கோஷம்!
எழுத்தறிவுதான் சிறந்த நிவாரணம். இதுதான் இந்த ஆண்டு உலக எழுத்தறிவு தினத்தின் கோஷம். எழுத்தறிவும் சுகாதாரமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. எழுத்தறிவு இல்லாதவர்கள் விழிப்புணர்வு இல்லாததால் நோய் பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள் என்று அறிவியல் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. எழுத்தறிவின் மூலம் சுகாதார மேம்பாட்டை ஏற்படுத்த முடியும் என்று யுனெஸ்கோ போன்ற அமைப்புகள் நம்புகின்றன. உலகெங்கிலும் எழுத்தறிவு இல்லாத வயது வந்தவர்களின் எண்ணிக்கை 774 மில்லியன். 15 வயது பிரிவினரில் ஐந்தில் ஒரு பங்கினர் எழுதப் படிக்கத் தெரியாமல் உள்ளனர். இதில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எழுத்தறிவு விகிதம் அதிகரித்து வந்துள்ளபோதிலும்கூட, எழுத்தறிவு இல்லாதவர்களின் எண்ணிக்கை அளவில் அதிகமாகவே உள்ளது. 7.5 கோடி குழந்தைகள் பள்ளிப் படிப்பை இடையிலேயே விட்டு விடுகின்றனர் என்பது கவலை அளிக்கும் விஷயமாகும். எனவேதான் உலகெங்கிலும் எழுத்தறிவு இயக்கத்திற்கு பெரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த அறுபது ஆண்டுகளில் கல்வி வளர்ச்சியில் நமது நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது. 1951-ம் ஆண்டில் நமது எழுத்தறிவு விகிதம் 18.33சதவீதம்தான். 2001ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி நமது எழுத்தறிவு விகிதம் 64.84 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 75.26 சதவீதம். பெண்களின் எழுத்தறிவு விகிதம் 53.67 சதவீதம். உத்தரபிரதேசம், பிகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரபிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத்திலும் எழுத்தறிவு இல்லாதவர்களின் எண்ணிக்கை 1.5 கோடிக்கு மேல் உள்ளது. அதாவது நாட்டில் உள்ள எழுத்தறிவற்றவர்களின் எண்ணிக்கையில் இது 69.7 சதவீதம். அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் அனைவருக்கும் கல்வி வழங்குவதற்கான சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியா விடுதலை அடைந்த பத்து ஆண்டுகளுக்கு அனைவருக்கும் கல்வியை அளிக்க வேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டி நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ள போதிலும் கூட, அனைவருக்கும் கல்வி என்பது இன்னமும் எட்டாத கனவாகத்தான் இருக்கிறது. பிச்சை புகினும் கற்கை நன்றே - இது ஔவை வாக்கு.