தடைபட்ட பாஸ்போர்ட் கிடைத்தது: அமெரிக்க கல்வி கனவு நனவானது
ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பட்காம் மாவட்டத்தை சேர்ந்தவர், சபாரியா, 15. பள்ளி மாணவியான இவர், இந்திய - அமெரிக்க இளைஞர் பரிவர்த்தனை கல்வி திட்டத்தின் கீழ், அமெரிக்கா செல்ல தேர்வான குழுவில் இடம் பெற்றார். இதனால், அமெரிக்க அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையுடன், அந்நாட்டில், ஓராண்டு தங்கி, கல்வி பயிலும் வாய்ப்பை பெற்றார். இதையடுத்து, அமெரிக்கா செல்வதற்காக, பாஸ்போர்ட் கோரி, சபாரியா விண்ணப்பித்தார். அவரின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் மீது, போலீசார் விசாரணை நடத்திய போது, சபாரியாவின் மாமா, பல ஆண்டுகளுக்கு முன், பயங்கரவாத அமைப்பில் இருந்ததும், அதன்பின், போலீசில் சரண் அடைந்ததும் தெரியவந்தது. இதனால், சபரியாவுக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகள் மறுத்தனர். பாஸ்போர்ட் அதிகாரிகளின் செயலால் அதிருப்தி அடைந்த சபாரியா, "1997ம் ஆண்டு பிறந்த எனக்கும், 1995ம் ஆண்டே போலீசில் சரணடைந்து விட்ட என் மாமாவுக்கும், என்ன தொடர்பு உள்ளது. இந்த ஒரு காரணத்திற்காக, எனக்கு பாஸ்போர்ட் வழங்க மறுக்கப்படுவதில் நியாயம் இல்லை" என கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக, பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் முற்றியதை அடுத்து, நேற்று முன் தினம், அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மாநில முதல்வர் உமர் அப்துல்லா, "சபாரியாவுக்கு பாஸ்போர்ட் வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார். இந்நிலையில், சபாரியாவின் பாஸ்போர்ட் விண்ணப்பம் தொடர்பான, போலீஸ் விசாரணை அறிக்கை, தங்கள் அலுவலகத்துக்கு வந்து விட்டதாகவும், அவருக்கு பாஸ்போர்ட் வழங்கப் போவதாகவும், மண்டல பாஸ்போர்ட் அதிகாரி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். "முறையான நடவடிக்கைகளுக்காக தாமதம் ஏற்பட்டதாகவும், போலீஸ் விசாரணை அறிக்கை கிடைத்து விட்டதால், சபாரியாவுக்கு பாஸ்போர்ட் வழங்குவதில், எந்த சிக்கலும் இல்லை" என்றும் அவர் கூறினார். இதனால், சபரியாவுக்கு விரைவில் பாஸ்போர்ட் கிடைத்து, அவர் அமெரிக்கா செல்வது உறுதியாகிஉள்ளது.