சாகித்ய அகாடமி விருது பெற்ற தேவிபாரதிக்கு அமைச்சர் வாழ்த்து
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே புதுவெங்கரையாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த எழுத்தாளர் தேவிபாரதி எழுதிய, நீர்வழிப்படூஉம் என்ற நாவலுக்கு, சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, நேற்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், எழுத்தாளர் தேவிபாரதியை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.காங்கேயம் வடக்கு ஒன்றிய செயலாளர் கருணைபிரகாஷ், கவுன்சிலர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.இது குறித்து, அமைச்சர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: தற்போது சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, நீர்வழிப்படூஉம் இவரது மூன்றாவது நாவலாகும். ஒரு தனி மனிதனின் வாழ்க்கையின் வீழ்ச்சியை, அவனுடன் சமூகம் கொள்ளும் உறவை சித்தரிக்கிறது இந்நாவல். நொய்யல் ஆற்றை மையமாக கொண்டு, கொங்கு வட்டாரத்தின் பண்பாட்டு மாற்றங்களை சித்தரிக்கும் படைப்பாக அமைந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர் சாகித்ய அகாடமி விருது பெறுவது பெருமை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.இவ்வாறு கூறினார்.