தேனி அரசு பள்ளி மாணவர்கள் ரோபோடிக்ஸ் பயிற்சியில் பங்கேற்பு
தேனி: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ராமநாதபுரத்தில் நடந்த ரோபோடிக்ஸ் பயிற்சி முகாமில் தேனி மாவட்ட மாணவர்கள் 12 பேர் பங்கேற்றனர்.பள்ளிக்கல்வித்துறை சார்பில் குளிர்கால உண்டு உறைவிடப் பயிற்சி பட்டறை சிறப்பு முகாம் ராமநாதபுரம், தஞ்சை, கோவை, சென்னையில் நடந்தது. இம்முகாமிற்கு மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்டனர்.ராமநாதபுரம் மாவட்டம் சையது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், மாணவிகளுக்கு அடிப்படை ரோபோடிக்ஸ் பயிற்சி வழங்கப்பட்டது. பூமி தன்னார்வ தொண்டு நிறுவன இணை இயக்குனர் பானு தலைமையிலான பொறியாளர்கள் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கினர். பயிற்சியில் மாணவர்களுக்கு ஆட்டோமெடிக் லைட், சவுண்ட், சென்சார் மூலம் செயல்படும் கருவிகள், பேரிடர்காலத்தில் பயன்படுத்தும் கருவிகள், உள்ளிட்டவை பற்றி விளக்கப்பட்டன.தேனி மாவட்டத்தை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் 6பேர், மாணவிகள் 6 பேர் என 12 பேர் பயிற்சியில் பங்கேற்றனர். அறிவியல் ஆசிரியர் உஸ்மான் அலி, சிறப்பு பயிற்றுனர் மணிமேகலை மாணவர்களை அழைத்து சென்றனர்.