அரசு மருத்துவமனையில் விரைவில் குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவு துவக்கம்
சென்னை: தென்சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் வசதிக்காக, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில், 12 கோடி ரூபாயில் நடைபெறும் குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவு கட்டுமான பணியை, மூன்று மாதத்தில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை, 1920ம் ஆண்டு துவங்கப்பட்டது. விபத்து உயிர் காக்கும் முதலுதவி மருத்துவமனையாக செயல்படும் இந்த மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை உள்ளது.கடந்த, 2017ம் ஆண்டு, 40 கோடி ரூபாயில் எட்டு மாடி கொண்ட கட்டடம் கட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதற்காக, அங்கிருந்த ஓட்டு கட்டடம் இடிக்கப்பட்டது. அரசியல் தலையீட்டால், புதிய கட்டடம் கட்டுவதற்கான கோப்புகள் கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில், ஆட்சி மாற்றத்திற்கு பின், நுற்றாண்டு கண்ட இந்த மருத்துவமனையை தரம் உயர்த்தும் கோரிக்கை வலுத்தது.இதையடுத்து, குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவு கட்ட, 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில், 10 கோடி ரூபாயில், 30 ஆயிரம் சதுர அடி பரப்பில், மூன்றடுக்கு கொண்ட கட்டடம் கட்டப்படுகிறது.கட்டுமான பணியை, மூன்று மாதத்தில் முடிக்கும் வகையில், சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மீதமுள்ள, 2 கோடி ரூபாயில் மருத்துவ உபகரணங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.இப்பிரிவில், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ள வசதிகளை ஏற்படுத்த உள்ளதால், தென்சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிமக்கள் அதிக பயன் அடைவர் என, அதிகாரிகள் கூறினர்.