உள்ளூர் செய்திகள்

கடலாடி அரசு கலைக்கல்லூரி அனைத்து துறைகளில் பேராசிரியர் பற்றாக்குறை

கடலாடி: கடலாடி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் பேராசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதால் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.அரசு கல்லுாரி 2013ல் கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கட்டடத்தில் இயங்கியது. அதன் பின் 2017ம் ஆண்டில் புதிய கட்டடத்தில் கல்லுாரி இயங்கி வருகிறது. பி.ஏ., தமிழ், பி.ஏ., ஆங்கிலம், பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.காம்., பி.பி.ஏ., என ஐந்து பிரிவுகள் உள்ளன. 420 மாணவர்கள் படிக்கின்றனர்.தமிழ் துறையில் 7 பேருக்கு 3 பேராசிரியர்களும், ஆங்கிலத் துறையில் 7 பேருக்கு 4 பேராசிரியர்களும், 5 பேருக்கு 3 பேராசிரியர்களும், பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ்சில் 5 பேருக்கு 3 பேராசிரியர்களும், நடப்பு ஆண்டில் புதியதாக கொண்டுவரப்பட்ட பி.பி.ஏ., என்ற புதிய பாடப்பிரிவிற்கு ஒரு பேராசிரியர் கூட இல்லை.தற்போது புதிதாக கொண்டுவரப்பட்ட பாடத்திட்டம் அதிகமாக உள்ளதாலும், நான் முதல்வன் என்ற ஒரு பாடமும் கூடுதலாக கொடுக்கப்பட்டதாலும் தேர்வுக்கான பாடங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியாமல் அல்லல்படுகின்றனர்.இதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்யாமல் கல்லுாரி நிர்வாகத்தினர் உள்ளனர். கல்லுாரி மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:கல்லுாரியில் பேராசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதால் மாணவிகள் சிரமத்தை சந்திக்கின்றனர். கல்லுாரியில் மைதான வசதி முற்றிலுமாக இல்லை. கல்லுாரி பின்புறத்தில் மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் மைதானம் இருந்தும் அவற்றில் சீமை கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு உள்ளது.இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு எடுத்துக் கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அதிகளவு பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் உள்ளது. மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்க உடற்கல்வி இயக்குனரும் இல்லாததால் கிராமப்புற மாணவர்களின் விளையாட்டுத் திறன் பாதிக்கப்படுகிறது.எனவே உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கவனம் செலுத்தி கூடுதல் பேராசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனரை நியமிக்க வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்