இதய நோய் பாதிப்புக்கு இனி ஜீன் தெரபி சிகிச்சை!
சென்னை: இனி வரும் காலங்களில், இதய பாதிப்புகளுக்கு, ஜீன் தெரபி, ஸ்டெம்செல் தெரபி உள்ளிட்ட சிகிச்சை முறைகள் அதிகம் பயன்படுத்தப்படும் என, இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் செங்கோட்டுவேலு கூறினார்.சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், மருத்துவத்தின் எதிர்காலம் குறித்த பன்னாட்டு மருத்துவ மாநாடு நடக்கிறது. இதய சிகிச்சையின் எதிர்காலம் என்ற தலைப்பில் டாக்டர் செங்கோட்டுவேலு பேசியதாவது:உலகளவில் ஒரு லட்சம் பேரில் 235 பேர் இதய நோயால் உயிரிழக்கின்றனர். அதுவே நம் நாட்டில் 272 ஆக உள்ளது. மரபணு, உணவு, வாழ்க்கை முறை மாற்றத்தால் வருங்காலங்களில் இதய பாதிப்புகள் அதிகரிக்க கூடும்.தற்போதைய சூழலில், இமோஜிங் பிஸியோதெரபி, 3டி பிரின்டிங், ஸ்டென்ட் ஆகிய சிகிச்சை முறைகள் பயன்பாட்டில் உள்ளன. வரும் காலங்களில், மைக்ரோ பாட், நானோ பாட் ஆகிய, ரோபோடிக் சிகிச்சை முறைகள் பயன்பாட்டுக்கு வரும்.இந்த சிகிச்சை முறைகளில், ரோபோடிக்கை ரத்த நாளங்களில் செலுத்தி, அடைப்பு இருக்கும் பகுதியில் மருந்தை செலுத்த முடியும். ஜீன் தெரபி என்ற சிகிச்சையில், இதய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செல்களை, மரபணு செல்கள் வாயிலாக மாற்றியமைக்க முடியும்.ஸ்டெம்செல் தெரபி வாயிலாக இதய பாதிப்புகளை சரி செய்தல் உள்ளிட்ட, மேம்பட்ட சிகிச்சை முறைகளும் அறிமுகமாகும். மேலும், கரையக்கூடிய ஸ்டென்ட், மைக்ரோ மானிட்டர் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் வாயிலாக, இதயபாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.