கேரள பள்ளியில் நள்ளிரவு பூஜை: விசாரணைக்கு கல்வித்துறை உத்தரவு
கோழிக்கோடு: கேரளாவில் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில், நடத்தப்பட்ட நள்ளிரவு பூஜை தொடர்பாக விசாரணை நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கோழிக்கோடு மாவட்டத்தின் குட்டியாடி பகுதியில் உள்ள நெடுமன்னுார் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில், கடந்த 12ம் தேதி நள்ளிரவில் ஹோமம் வளர்த்து பூஜை நடத்தப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது.அந்த வீடியோவில், சாமியார் ஒருவர் ஹோமம் வளர்த்து சிறப்பு பூஜை நடத்துகிறார். அதைச் சுற்றி சிலர் நின்று வழிபடும் காட்சி இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து பள்ளியில் நள்ளிரவு பூஜை நடத்தப்பட்டதை கண்டித்து இந்திய மாணவர் கூட்டமைப்பு, இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு ஆகியவை போராட்டம் நடத்தின.இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்படவில்லை என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த பூஜை நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக கல்வித்துறை இயக்குனர் விசாரணை நடத்தி உடனடியாக அறிக்கை தாக்கல் செய்யய கல்வித்துறை அமைச்சர் வி.சிவன் குட்டி உத்தரவிட்டுள்ளார்.