உள்ளூர் செய்திகள்

பொதுத்தேர்வு டாப் ஷீட் பதிவிறக்கம் செய்வதில் புதிய நடைமுறை

மதுரை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் டாப் ஷீட் (முகப்பு தாள்) பதிவிறக்கம் செய்யும் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரையில் கடந்தாண்டு தேர்வில் நடந்த முறைகேடு எதிரொலியாக தேர்வுத்துறை இம்மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.மார்ச் 1 முதல் பிளஸ் 2 தேர்வு துவங்குகிறது. இத்தேர்வுக்காக மாணவர்கள் எழுதவுள்ள விடைத்தாள்களில் முதல் பக்கத்தில் இந்த டாப் ஷீட் துளையிடப்பட்டு நுாலால் கட்டப்பட்டும். சி.இ.ஓ., அலுவலகங்கள் வழிதேர்வுத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்கள் மூலம் வினியோகம் செய்து முடிக்கப்பட்டது.இதுவரை மாணவர்கள் பெயர் பட்டியலில் (என்ட்ரோல்மென்ட்) பெயர் விடுபட்ட மாணவர்களுக்கு கடைசி நேரத்தில் இவ்வகை டாப்ஷீட்களை பதிவிறக்கம் செய்வதற்கான சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு தனியாக யூசர் நேம், பாஸ்வேர்டு வழங்கப்படும்.இதேபோல் அந்தந்த டி.இ.ஓ., சி.இ.ஓ., அலுவலங்களிலும் பதிவிறக்கம் செய்வதற்கான தனி யூசர் நேம், பாஸ்வேர்டுகள் வழங்கப்பட்டிருந்தன.இந்த நடைமுறை கடந்தாண்டு வரை அமலில் இருந்தது. ஆனால் மதுரையில் கடந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் ஒரு பிரபல தனியார் பள்ளியில் இரண்டு மாணவர்கள் விடைத்தாள்களை மாற்றி மோசடி செய்தனர். மேலும் பள்ளி, கல்வி அலுவலகங்களிலும் சம்பந்தப்பட்ட மாணவர்களின் டாப்ஷீட்டுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.இந்நிலையில் இந்தாண்டு பொதுத் தேர்வில் பள்ளிகளில் டாப்ஷீட் பதிவிறக்கம் செய்யும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில் ஷீட்டில் மாணவர் பெயர், பிறந்த தேதி, தேர்வு எண், பள்ளி பெயர் உள்ளிட்ட முழு தகவல்களும் இடம் பெற்றிருக்கும்.இவ்வகை டாப் ஷீட் ஒரு பள்ளியில் பெயர் விடுபட்ட மாணவருக்கு தேவை என்றால் அந்த பள்ளி சார்பில் தனியாக பதிவிறக்கம் செய்ய முடியாது. சம்பந்தப்பட்ட தேர்வுத்துறைக்கு தான் விண்ணப்பித்து பெற முடியும். கடந்தாண்டு மதுரையில் பிளஸ் 2 தேர்வில் நடந்த முறைகேடு கூட இந்த நடைமுறை மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்