உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் கோஷ்டி ஆசிரியர்கள்: மாணவியர் கல்வி பாதிப்பு

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் தலைமையாசிரியை திலகவதி, உதவித் தலைமையாசிரியர் கர்ணன்ஆதரவாளர்களாக ஆசிரியர்கள், அலுவலர்கள் கோஷ்டியாக பிரிந்து பணியாற்றுவதால் மாணவிகள் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.இப்பள்ளியில் நடந்த இடைத்தேர்வு விடைத்தாள்களை ஆசிரியர்கள் திருத்துவதற்கு பதில் ஆண் ஆசிரியர்கள் ஓய்வறையில் பிளஸ் 2 மாணவிகளை விடைத்தாள்கள் திருத்த வைத்ததாக தலைமையாசிரியை புகார் அளித்தார். ஆனால் மாணவிகள் ஆசிரியர்களின் ஓய்வறையில் அமர்ந்து கம்ப்யூட்டரில் பதிவிடும் பணிகளை செய்தனர்.விடைத்தாள்களை திருத்தவில்லை என உதவித் தலைமையாசிரியர் மறுத்தார். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இந்நிலையில் அப்பள்ளியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள் கர்ணன் தலைமையில் நேற்று மாலை சி.இ.ஓ.,கார்த்திகாவை சந்தித்து தலைமையாசிரியர் மீது புகார் தெரிவித்தனர். நடந்த சம்பவம் குறித்து விளக்கக் கடிதம் அளிக்குமாறு சி.இ.ஓ., உத்தரவிட்டார். இதன்படி உதவி தலைமையாசிரியர் தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டது. இருப்பினும் இரவு 8:00 மணி வரை அலுவலகத்தில் முகாமிட்டனர்.இணை இயக்குநர் விசாரிப்பாராஇதுகுறித்து நடுநிலை ஆசிரியர்கள், பெற்றோர் கூறியதாவது: இப்பள்ளியில் பல மாதங்களாக ஆசிரியர்கள், அலுவலர்கள் என இரு கோஷ்டிகளாக பிரிந்து கிடக்கின்றனர்.தலைமையாசிரியை மீது குற்றம் சுமத்தி மாணவிகளை பேச வைத்த வீடியோக்கள் வெளியாகி வைரலானது. ஆனால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை இல்லை. தற்போது மாணவிகளை விடைத்தாள் திருத்த கூறியதாக புகார் எழுந்துள்ளது.இப்பள்ளியில் இருதரப்பினராலும் கலெக்டர், சி.இ.ஓ., உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார்கள் அளித்தும் சர்ச்சைகள் தொடர்கின்றன. மாவட்ட கல்வி அதிகாரிகள் இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பின்னணியில் ஆசிரியர் சங்கங்கள் இருப்பதால் உள்ளூர் அதிகாரிகள் தயங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது மாணவிகளும் கோஷ்டியாக பிரிந்து படிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.எனவே சம்பந்தப்பட்ட இணை இயக்குநர் (மேல்நிலை) கோபிதாஸ் இதுகுறித்து உடன் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்