தொடக்கப்பள்ளிகளில் சேர்க்கை சரிவு! குழந்தை பிறப்பு குறைந்ததால் விபரீதம்
பொள்ளாச்சி: நகரங்கள் மற்றும் கிராமங்களில், குழந்தை பிறப்பு விகிதம் குறைவு காரணமாக, அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை சரிவு அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒவ்வொரு கல்வி ஆண்டும், ஜூன் மாதத்தில் இருந்தே மாணவர் சேர்க்கை நடத்தப்படும். ஆனால், தற்போது, 2044-25ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை, கடந்த மார்ச் மாதம் துவங்கியது.அதன்படி, தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மாணவ மாணவியர் புதிதாக சேர விண்ணப்பம் அளித்து வருகின்றனர்.குறிப்பாக, ஒன்று, 6, 9 மற்றும் 11 ம் வகுப்புகளில், மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இதற்காக, அரசு பள்ளிகளில் பயின்றால் உயர்கல்வி பயில, 7.5 சதவீதம் முன்னுரிமை, கல்வி உதவித்தொகை என, பல்வேறு திட்டங்கள் குறித்து மக்களிடையே விளக்கப்படுகிறது. இருப்பினும், நகரங்கள் மற்றும் கிராமங்களில், குழந்தை பிறப்பு விகிதம் குறைவு காரணமாக, அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை சரிவு அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.இதுகுறித்து, பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது:இம்மாதம் ஆண்டு இறுதித் தேர்வு முடிந்து, மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும். அதன்படி, 'எமிஸ்' தளத்தில், ஒரு வகுப்பைச் சேர்ந்த மாணவர், அடுத்த வகுப்பிற்கு முன்னேறினார் என, பிரமோஷன் அளித்தால் மட்டுமே மாணவர் சேர்க்கை முறையாக துவக்கப்படும்.அதன்படி, மே மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து, அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை உறுதிபடுத்தப்படும்.தற்போது, நகர் மற்றும் கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மிகக் குறைவாகவே பெறப்பட்டுள்ளது.இதற்கு, பெரும்பாலான தம்பதியர், ஒரு குழந்தை போதும் என்ற மனநிலைக்கு மாறி, பிறப்பு விகிதம் குறைந்துள்ளதே காரணமாகும். அந்த தம்பதியரும், தங்கள் குழந்தையை தனியார் பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.பெற்றோரிடம் ஆர்வமில்லை!கடந்த காலங்களில், அரசு பள்ளிகளில், ஒவ்வொரு கல்வியாண்டு துவக்கத்திலும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். அதன்படி, ஆக., 1ம் தேதி வரை பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடக்கும். அதிலும் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டால், ஆக., 31 வரை சேர்க்கை தொடரும். ஆனால், தற்போது, ஆண்டு முழுதும் கூட அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கை நடக்கிறது. அவ்வாறு இருந்தும், அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் சரிந்து கொண்டே வருகிறது.அதிலும், கிராமப்புறங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை, மிக குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே கல்வி பயின்று வருகின்றனர். அரசு பள்ளியில் பெற்றோர் குழந்தைகளை, சேர்க்க ஆர்வம் செலுத்தும் வகையில், தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை துவங்கி, கற்பித்தல் திறனை மேம்படுத்த வேண்டும்.