ஐந்து மாதங்களாக சம்பளம் வரலை குழப்பத்தில் பாரதியார் பல்கலை
கோவை: பாரதியார் பல்கலையில், 58 கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஐந்து மாதங்களாக ஊதியம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பொதுவாக, பல்கலை விதிமுறைகளின் படி, பணிநியமனங்கள் மேற்கொள்ளும் போது பல்கலை நிதிக்குழு, சிண்டிகேட் குழுவில் ஒப்புதல் பெற்ற பின்னரே செயல்பாடுகளை துவக்க வேண்டும்.பல்கலை இணையதளம் மற்றும் நாளிதழ்களில், கட்டாயம் விளம்பரம் கொடுக்க வேண்டும். ஆனால், எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றாமல், கடந்த சில மாதங்களுக்கு முன் கவுரவ விரிவுரையாளர்கள், பணிநியனம் செய்யப்பட்டுள்ளனர்.இதுகுறித்து உயர்கல்வித்துறை செயலர் உத்தரவின் பேரில், சில மாதங்களுக்கு முன், ஐ.ஏ.எஸ்., தலைமையில் அதிகாரி ஒருவர் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பித்தார். இந்த அறிக்கைகுறித்த தகவல்களும், இதுவரை வெளியிடப்படவில்லை.நிர்வாக பிரிவில், பெண் அலுவலர் ஒருவர் இதுதொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், விதிமுறை மீறி பணிநியமனம் செய்யப்பட்ட கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியம், கடந்த ஐந்து மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.பதிவாளர் ரூபாவிடம் கேட்டபோது, இது தொடர்பாக, விசாரணை கமிட்டி அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில், ஊதியம் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.புதிய கல்வியாண்டு துவங்கும் சூழலில், ஊதியம் கிடைக்காததால், பிள்ளைகளுக்கு கல்விக்கட்டணம் செலுத்தவும், பிற செலவினங்களை மேற்கொள்ளவும் பணமின்றி, புதிதாக நியமனம் செய்யப்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் தவிக்கின்றனர். விரைந்து நடவடிக்கை எடுத்தால் நல்லது.