கர்நாடகாவுக்கு கல்வி சுற்றுலா வந்த விழுப்புரம் மாணவர்கள் குதுாகலம்
பெங்களூரு: தமிழகத்தின் விழுப்புரம் தனியார் பள்ளி மாணவர்கள், கர்நாடகாவுக்கு கல்வி சுற்றுலா வந்தனர். சுற்றுலா தலங்களை பார்த்து குதுாகலித்தனர்.தமிழகத்தின் விழுப்புரம் சாலமேடுவில் இ.எஸ்., லார்ட்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரை ஆண்டுதோறும் கோடைகாலத்தில் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்வது வழக்கம்.இந்த ஆண்டு கர்நாடகாவுக்கு கல்வி சுற்றுலா வருவது என்று, பள்ளி நிர்வாகம் முடிவு எடுத்தது. இதன்படி கடந்த 14ம் தேதி இரவு 26 மாணவர்கள், 21 மாணவியர், ஆசிரியர்கள் ஒரு பஸ்சில் புறப்பட்டனர்.கடந்த 15ம் தேதி காலை மைசூரு சென்றனர். மைசூரு அரண்மனை, சாமுண்டீஸ்வரி கோவில், சாமராஜா விலங்கியல் பூங்காவை சுற்றிப்பார்த்தனர். இரவு மைசூரில் தங்கியவர்கள், நேற்று முன்தினம் காலை குடகு சுற்றுலா சென்றனர். துபாரே யானைகள் முகாம், ஹாரங்கி அணை, தங்க கோவிலை சுற்றிப்பார்த்தனர். அங்கிருந்து மைசூரு வந்து இரவில் தங்கினர்.நேற்று காலை மைசூரில் இருந்து புறப்பட்டு, பெங்களூரு வந்தனர். மஹாலட்சுமி லே - அவுட்டில் உள்ள இஸ்கான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் விஸ்வேஸ்வரய்யா அருங்காட்சியகத்தை சுற்றிப்பார்த்தனர். பின்னர் சிவாஜிநகர் வந்து ஷாப்பிங் செய்தனர். அதன்பின்னர் ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்.இதுகுறித்து ஆசிரியர் குணசேகர் கூறியதாவது:கல்வி சுற்றுலா வந்த மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு; 11ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு செல்ல கூடியவர்கள். பாடப்புத்தகத்தில் கர்நாடகாவில் உள்ள சுற்றுலா தலங்கள் பற்றி படித்து இருப்பர்.புத்தகத்தில் படித்ததை நேரில் பார்க்க வேண்டும், வெளி உலகம் பற்றி தெரிய வேண்டும் என்ற நோக்கில், சுற்றுலா அழைத்து வந்தோம். சுற்றுலா தலங்களை பார்த்து மாணவர்கள் குதுாகலித்தனர். இவ்வாறு அவர்கூறினார்.