உள்ளூர் செய்திகள்

ஸ்ரீசத்ய சாய் நிறுவன மாணவர் ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதனை

சென்னை: ஸ்ரீசத்ய சாய் கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர் புவனேஷ்ராம், ஐ.ஏ.எஸ்., தேர்வில், தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.சென்னை குரோம்பேட்டையில் உள்ள, ஸ்ரீசத்ய சாய் கல்வி நிறுவனம், 1978 ம் ஆண்டு முதல் சமுதாயத்திற்கு முன் மாதிரியாக திகழக்கூடிய மாணவர்களை, உருவாக்கி வருகிறது. இப்பள்ளி முன்னாள் மாணவர் புவனேஷ்ராம், இந்த ஆண்டு ஐ.ஏ.எஸ்., தேர்வில், தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.இவர் புட்டபர்த்தியில் உள்ள சுவாமி பல்கலையில் உயர் கல்வி கற்றார். தற்போது ஆவடியில் வசித்து வருகிறார். ஐ.ஏ.எஸ்., தேர்வில், தமிழக அளவில் முதல் மாணவராகவும், இந்திய அளவில் 41வது மாணவராகவும் தேர்ச்சி பெற்றுள்ளார். புவனேஷ்ராமுக்கு, ஸ்ரீசத்ய சாய் கல்வி நிறுவனம் வாழ்த்து தெரிவித்துள்ளது.அவர் கூறியதாவது:நான் பள்ளி படிப்பை, சத்ய சாய் பள்ளியில் படித்தேன். அங்கு பொதுமக்களுக்கு சேவை செய்வதை அறிந்து கொண்டேன். மனிதர்களின் மதிப்பை தெரிந்து கொண்டேன்.பளளியில் படிக்கும்போதே, தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காமல், அந்த பணத்தை 'கிராம சேவை' என்ற பெயரில், மாணவர்கள் இணைந்து, கிராம மக்களுக்கு அரிசி வழங்குவது போன்ற உதவிகளை செய்வோம்.மின் வாரியத்தில் பணியாற்றி வரும் என் தந்தை மற்றும் குடும்பத்தினரும் பொது சேவை செய்து வந்தனர். இதுதான் சரியான வாழ்க்கை முறை என்று வளர்ந்ததால், ஐ.ஏ.எஸ்., தேர்வில் ஆர்வம் ஏற்பட்டது. பி.எஸ்.சி., இயற்பியல் படித்தேன். ஆறாவது முயற்சியில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன்.இது மாரத்தான் மாதிரி. ரொம்ப துாரம் ஓட வேண்டும். ஆர்வத்துடன் படிக்க வேண்டும். இது ஆளுமை திறன் அதிகரிக்கும். எந்த பாடம் எடுத்து படித்தாலும், யார் வேண்டுமானாலும் தேர்ச்சி பெற முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்