நீராவி அளவை கணக்கிடும் ஆய்வு; இம்ப்காப்ஸ் நிறுவனம் ஒப்பந்தம்
சென்னை: லேகியம், கஷாயம் உள்ளிட்டவை தயாரிக்க, விறகுகள் எரிக்கப்படும் போது வெளியாகும் நீராவி அளவை கணக்கிட, சென்னை ஐ.ஐ.டி., பிரவர்தக் நிறுவனத்துடன், 'இம்ப்காப்ஸ்' நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, இம்ப்காப்ஸ் நிறுவன தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில், ஐ.ஐ.டி., பிரவர்தக் இயக்குனர் சங்கர்ராமன், இம்ப்காப்ஸ் செயலர் காதர் மொய்தீன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்த்தில் நேற்று கையெழுத்திட்டனர்.இதுகுறித்து, இம்ப்காப்ஸ் நிறுவன தலைவர் கண்ணன் கூறியதாவது:இம்ப்காப்ஸ் தொழிற்சாலையில், லேகியம், கஷாயம் உள்ளிட்ட மருந்துகளை தயாரிக்க, தினமும் 1,000 கிலோ விறகுகள் என, மாதத்திற்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான விறகுகள் பயன்படுத்தப்படுகின்றன.இந்த விறகுகளில் இருந்து வெளியாகும் நீராவி அளவு ஒரே சீராக இருக்கும்பட்சத்தில் தரமான மருந்துகளை தயாரிக்க முடியும். எனவே, சென்னை ஐ.ஐ.டி., பிரவர்தக் நிறுவனத்துடனான போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் வாயிலாக, நீராவி அளவு கணக்கிடப்பட உள்ளது.இந்த ஆய்வை இம்ப்காப்ஸ் நிறுவனத்திற்காக ஐ.ஐ.டி., நிறுவனம் இலவசமாக மேற்கொண்டாலும், ஆய்வுக்காக 3.5 லட்சம் ரூபாயைசெலவிடுகிறது. நீராவி அளவை கணக்கிடுவதற்கான ஆய்வு ஆறு மாதம் வரை நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இம்ப்காப்ஸ் நிறுவன இயக்குனர் டாக்டர் மீரா சுதீர் கூறுகையில், ஸ்டீம் அளவை கணக்கிடுவதற்கான ஆய்வு நடத்துவதன் வாயிலாக, எங்களது அனைத்து தயாரிப்பு மருந்துகளையும் ஒரே சீரான அளவில், தரமானதாக மக்களுக்கு வழங்க முடியும்.மேலும், வருங்காலங்களில், எவ்வளவு மருந்துக்கு எவ்வளவு நீராவி தேவை என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். சென்னை ஐ.ஐ.டி., பிரவர்தக் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் வாயிலாக மருந்துகளின் தரம்மேம்படும் என்றார்.