வி.ஐ.டி., வேந்தர் விஸ்வநாதனுக்கு நியூயார்க் பல்கலை டாக்டர் பட்டம்
சென்னை: வேலுார் வி.ஐ.டி., பல்கலை வேந்தர் கோ.விஸ்வநாதனுக்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி, அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பிங்ஹாம்டன் பல்கலை சிறப்பித்துள்ளது.கல்வித்துறையில் விஸ்வநாதன் பல உயரிய சேவைகளை செய்து வருகிறார்; இவர் நிறுவிய வி.ஐ.டி., பல்கலை, நாட்டில் உள்ள தனியார் பல்கலையில் முதன்மையானதாக விளங்கி வருகிறது. இவருக்கு, 2009ல் அமெரிக்காவில் உள்ள வெஸ்ட் வெர்ஜீனியா பல்கலை, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.இந்நிலையில், விஸ்வநாதன் சர்வதேச அளவில், உயர் கல்வி வளர்ச்சிக்காக செய்த சேவைகளை கவுரவிக்கும் வகையில், அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாண பல்கலையான பிங்ஹாம்டன் பல்கலை, கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்தது.இதையடுத்து, கடந்த 10ம் தேதி பிங்ஹாம்டன் பல்கலையில் நடந்த விழாவில், விஸ்வநாதனுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை, அப்பல்கலையின் வேந்தர் ஹார்வி ஸ்டிங்கர் வழங்கினார்.அவர் பேசுகையில், இந்தியாவில் உயர் கல்விக்கான பாதையை உலகளவில் விரிவுபடுத்துவதிலும், தலைசிறந்த நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதிலும், விஸ்வநாதன் முன்னோடியாக இருக்கிறார் என்றார்.விழாவில், நியூயார்க் மாகாண சட்ட மேல்சபை உறுப்பினர் டொன்னா லுப்பாடோ, செனட் உறுப்பினர் லியாவெப், முதல்வரும், பேராசிரியருமான ஸ்ரீஹரி கிருஷ்ணசாமி, இணை வேந்தர் டொனால்டு ஹால் மற்றும் வி.ஐ.டி., துணைத்தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன், சேகர் விஸ்வநாதன், ஜி.வி.செல்வம், உதவி துணைத்தலைவர் காதம்பரி ச.விஸ்வநாதன், வி.ஐ,டி., சர்வதேச உறவுகள் துறை இயக்குனர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதேபோல, அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரிலும், அவருக்கு பாராட்டு விழா நடந்தது.