பெற்றோர் தொடர்பு எண் சரிபார்க்கும் பணி தீவிரம்
திருப்பூர்: ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைக்கல்வி பயில்வோருக்கு, அரசின் நலத்திட்ட உதவிகள் பல வழங்கப்படுகிறது. இவை மாநில அளவிலும், மாவட்டங்களில் சரிவர சென்று சேருகிறது என்பதை கண்காணிப்பது, மாவட்ட கல்வித்துறைக்கு சவால் மிகுந்த பணியாகி விடுகிறது.பள்ளிக்கு ஒன்றிரண்டு பெற்றோராவது எங்களுக்கு இந்த உதவி கிடைக்கவில்லை, மற்றவர்களுக்கு கிடைத்துள்ளது என புகார் வாசிக்கின்றனர். கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில், இது குறித்து முன்கூட்டியே பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பபட்டுள்ளது. நலத்திட்டம் வழங்கப்பட்ட கால அவகாசத்தில் அவர்கள் பெறவில்லை என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.பெரும்பாலான பெற்றோர் ஒரு மொபைல் போன் எண் பயன்படுத்தாததும், எண் மாற்றிய பின், பள்ளி ஆசிரியர் அல்லது தலைமை ஆசிரியரை சந்தித்து, மாணவர் பெயரில் உள்ள பதிவு செய்துள்ள மொபைல் போன் எண்ணை பதிவு செய்யாததும் இதற்கான காரணமென கண்டறியப்பட்டது. இதனையடுத்து, 2024 - 2025 புதிய கல்வியாண்டு துவங்க உள்ள நிலையில், பதிவு செய்துள்ள மாணவர், பெற்றோர் மொபைல் போன் எண்களை உறுதிப்படுத்தும் பணியை பள்ளி ஆசிரியர்கள் துவங்கியுள்ளனர்.பெற்றோரை அழைக்கும் ஆசிரியர்கள், தங்களிடம் உள்ள பட்டியலை கொண்டு மாணவர்/மாணவி பெயர் சொல்லி, பள்ளியில் இருந்து அழைக்கிறோம்; மொபைல் எண் 'அப்டேட்டுக்காக'. உங்களுக்கு வந்துள்ள ஓ.டி.பி.,யை தெரிவியுங்கள் தெரிவிக்கின்றனர்.தமிழக பள்ளிக்கல்வித்துறை (TNSEDU) என்ற பதிவு செய்யப்பட்ட நம்பரில் இருந்து ஓ.டி.பி., அனுப்பபடுகிறது. இதனை சரிபார்க்கும் பணியில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளியில் எத்தனை மாணவர்கள், எந்தெந்த வகுப்பில் படிக்கின்றனர் என்ற விபரத்தை துல்லியமாக அறிந்து கொள்ள, தரவுகள் அப்டேட் செய்யப்படுகிறது. பெற்றோர் தயக்கமில்லாமல், ஆசிரியர்களிடம் ஓ.டி.பி., விபரங்களை தெரிவிக்கலாம், என்றனர்.