உள்ளூர் செய்திகள்

ஆஸ்திரேலியாவில் சமூக வலைதளம் பயன்படுத்த சிறுவர்களுக்கு வருது தடை

சிட்னி: ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறியுள்ளார்.இன்றைய இணைய உலகம் இளசுகளை மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு மக்களையும் கட்டிப்போட்டுள்ளது. ஒரு செல்போனில் விரல் நுனியில் அனைத்தையும் தெரிந்துகொள்ள ஆர்வமாய் இருக்கும் நாம், நமக்கு தெரியாமலேயே அடிமையாகி கொண்டு வருகிறோம் என்பதை உணர மறுக்கிறோம். குறிப்பாக ஒவ்வொருவரும் குறைந்தது ஏதேனும் ஒரு சமூக வலைதளத்திலாவது உலாவிக்கொண்டுதான் இருக்கிறோம். குறிப்பாக குழந்தைகளும்கூட சமூக வலைதளத்தில் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.அவர்களும் தனித்தனி அக்கவுண்டை உருவாக்கி, பயன்படுத்தி வருகின்றனர். அதிக நேரங்களை சமூக வலைதளத்தில் செலவிடுவதால் குழந்தைகளின் மனநிலை, கல்வி போன்றவை பாதிக்கப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த புதிய முயற்சியை எடுக்க முன்வந்துள்ளது ஆஸ்திரேலிய அரசு. அதாவது, ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறியதாவது:குழந்தைகளை அவர்களின் செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் இருந்து விலக்கி, விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளங்கள், டென்னிஸ் மைதானங்களில் பார்க்க விரும்புகிறேன். அவர்கள் உண்மையான நபர்களுடன் உண்மையான அனுபவங்களைப் பெற வேண்டும் என்று விரும்புகிறோம். சில சமூக ஊடகங்கள் தீங்கு விளைவிப்பதாக இருக்கிறது. சமூக ஊடகங்களில் உள்ள தகவல்கள் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தில் தாக்கங்கள், அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இருப்பது கவலை அளிக்கிறது.எனவே குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டத்தை இந்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். எந்த வயது குழந்தைகளுக்கு தடை விதிப்பது என்பது குறித்து வயது சரிபார்ப்பு சோதனை விரைவில் துவங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அதேநேரத்தில், சமூக வலைதளங்களில் வயது வரம்பை அமல்படுத்துவது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியம் குறைவுதான் என்கின்றனர் ஆய்வாளர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்