பேச முடியாத இன்ஜினியருக்கு தமிழ் மொழி தேர்வில் விலக்கு
சென்னை: வாய் பேசாத, காது கேளாத, வீட்டு வசதி வாரிய உதவி பொறியாளருக்கு, தமிழ் மொழி தேர்வில் விலக்கு அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வீட்டுவசதி வாரியத்தில், தொழில்நுட்ப பிரிவு உதவி பொறியாளராக வித்யாசாகர் என்பவர் பணியாற்றுகிறார். மூன்று வயதில் இருந்தே, இவரால் வாய் பேச முடியாது; காதும் கேட்காது. ஆங்கில மொழியில் பள்ளி கல்வியை முடித்தார். 2003ல் பொறியியல் பட்டம் பயின்றார். 2014ல் உதவி பொறியாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டார்.அரசு உத்தரவின்படி, தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.இந்நிலையில், இந்தாண்டு நவம்பர் 1க்கு முன், தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்; தவறினால், பணியில் இருந்து விடுவிப்பதாக, வித்யாசாகருக்கு வீட்டு வசதி வாரியத்தில் இருந்து கடிதம் வந்தது.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் டி.முத்துக்குமார் ஆஜரானார்.வாரியம் சார்பில் வழக்கறிஞர் வி.லோகேஷ், பதில் மனு தாக்கல் செய்தார். தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும்; அரசு இதற்கு விலக்கு அளிக்கவில்லை என, பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது.மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:தமிழ் மொழி தேர்வில், எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடங்கியுள்ளது. எழுத்து தேர்வில், இரண்டு முறை பங்கேற்றுள்ளார்; அவருக்கான நேர்முகத் தேர்வை நடத்த முடியாது.மனுதாரரை பொறுத்தவரை, 100 சதவீதம் வாய் பேச முடியாது; காதும் கேட்காது. பள்ளிக்கல்வி, பட்டப் படிப்பை முடித்திருப்பது, அவரது உறுதியை காட்டுகிறது. வீட்டுவசதி வாரியத்தின் விதிமுறைகளில், தகுதியானவர்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.பொதுப்பணி துறையில் பணியாற்றிய ஒருவருக்கு, விதிகளை தளர்த்தி, தமிழ் மொழி தேர்வு எழுத விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.மனுதாரரின் நிலையை பரிசீலித்தால், அவரால் எப்படி நேர்முகத் தேர்வில் பங்கேற்க முடியும். நீண்ட போராட்டத்துக்குப் பின், பணியில் நுழைந்துள்ளார்; 10 ஆண்டுகளாக பணியாற்றுகிறார். அவரை விடுவித்தால், வேலையின்றி வீதிக்கு வந்து விடுவார்.எனவே, தகுதியான இவருக்கு, விலக்கு அளிக்கப்பட வேண்டும். தமிழ் மொழி தேர்வு தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்பதற்கு விலக்கு அளிக்க, வீட்டுவசதி வாரியத்துக்கு உத்தரவிடப்படுகிறது.இதுகுறித்த உத்தரவை, நான்கு வாரங்களுக்குள் வாரியம் பிறப்பிக்க வேண்டும். மனுதாரருக்கான சலுகைகளை வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.