சங்ககால பாடல்களின் உண்மைத்தன்மையை நிரூபித்தது தொல்லியல் அகழாய்வுகளே
மதுரை: தொல்லியல் துறை அகழாய்வுகளின் மூலமே சங்ககால பாடல்கள் உண்மையாக பாடப்பட்டன என நிரூபிக்க முடிந்தது என, மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடந்த தமிழ்க்கூடல் நிகழ்வில் தொல்லியல் ஆர்வலர் முத்தாலங்குறிச்சி காமராசு தெரிவித்தார்.சங்க ஆய்வு வள மையர் ஜான்சிராணி வரவேற்றார். இடைச்சங்க சுவடுகள் நிறைந்த தாமிரபரணி கரை என்னும் தலைப்பில் முத்தாலங்குறிச்சி காமராசு பேசியதாவது:தாமிரபரணி ஆறு தோன்றும் இடம் பொதிகை மலையின் உச்சி. இதன் பழமையான பெயர் பொருநை. தாமிரபரணி கரையில் தான் தமிழ் இடைச்சங்கம் தோன்றியது. நக்கீரனின் பாடலில் சங்கரறுப்பர் எங்கள் குலம் என்று சொல்லுவார். சங்கறுக்கும் தொழில் மதுரையில் இல்லை. இது வைகை கரையில் உள்ளது. ஆனால் கொற்கை சங்கரறுக்கும் இடமாக இருந்துள்ளதால் தமிழ் இடைச்சங்கம் இருந்த இடம் கொற்கையாக தான் இருக்க வேண்டும். கொற்கையில் இருந்து 4 கி.மீ., தொலைவிலுள்ள கீரனுார் நக்கீரன் பெயரை தாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.தமிழகத்தின் முதல் அகழாய்வு நடந்த துாத்துக்குடி ஆதிச்சநல்லுாரில் முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. துாத்துக்குடியில் ரயில்வே தண்டவாளம் தோண்டும்போது முதுமக்கள் தாழி கிடைத்ததால் தொல்லியல் துறைக்கு 150 ஏக்கர் நிலம் அரசால் ஒதுக்கப்பட்டது. சிந்து சமவெளி நாகரீகத்திற்கு இணையாக ஆதிச்சநல்லுார் நாகரீகத்தை சொல்ல முடியும். ஆதிச்சநல்லுாரில் உள்ள 36 தொல்லியல் எச்சங்களில் 7 இடங்கள் மட்டுமே அகழாய்வு செய்யப்பட்டுள்ளன. கீழடி அகழாய்வில் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்டால் ஆதிச்சநல்லுார் 3200 ஆண்டுகள் பழமையானது.தமிழர்களின் நாகரீகத்தை பதிவு செய்ய வேண்டும் எனில் பொருநை ஆற்றங்கரையில் இருந்து தொடங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொல்லியல் துறை ஆய்வுகள் மூலம் சங்ககால பாடல்கள் உண்மை என்பதை நிரூபித்துள்ளோம் என்றார். ஆய்வறிஞர் சோமசுந்தரி நன்றி கூறினார்.