புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் பிற மாநிலத்தவர்கள் இணைப்பு
உடுமலை: புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், பிற மாநிலத்தை சேர்ந்தவர்களையும் கற்போர் பட்டியலில் சேர்ப்பதற்கு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தை கல்வியில் சிறந்த இடத்தை பெறும் வகையில், அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், அனைத்து பகுதிகளிலும், 15 வயதுக்கு மேற்பட்ட கல்லாதவர்களுக்கு அடிப்படை கற்றல் வழங்கும் வகையில், புதிய பாரத எழுத்தறிவு திட்டம் செயல்படுகிறது. இத்திட்டத்தின்படி ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அரசு பள்ளிகள், மையங்களாக செயல்படுகின்றன.பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் கல்லாதவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு தன்னார்வலர்கள் வாயிலாக, அடிப்படை கற்றல் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், பெரும்பான்மையாக முதியவர்கள் தான் கற்போராக உள்ளனர்.தற்போது இத்திட்டத்தின் வாயிலாக, அனைத்து மாவட்டங்களையும் நுாறு சதவீதம் கல்வி அறிவு பெற்ற மாவட்டமாக மாற்றுவதற்கான, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இலக்கை விடவும் கூடுதல் கற்போரை கண்டறிந்து பதிவு செய்வதற்கு கல்வித்துறை அறிவித்தது.இவ்வாறு கூடுதல் கற்போர் பட்டியலில், பிற மாநிலத்தவர்களையும் இணைப்பதற்கு, கல்வித்துறை அலுவலர்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு வாய்மொழியாக அறிவித்துள்ளனர்.அரசு பள்ளிகளில் படிக்கும் பிற மாநில குழந்தைகளின் பெற்றோர், அப்பகுதியில் பணிசெய்வோர் என கல்லாதவர்களை கண்டறிந்து சேர்ப்பதற்கு, கல்வித்துறை ஆசிரியர்களுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது.இதற்கான நடவடிக்கைளில், ஆசிரியர்கள், கல்வித்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.