குழந்தைகள் மையத்திற்கு மழை பெய்தால் லீவு
கொட்டாம்பட்டி: அட்டப்பட்டி குழந்தைகள் மையத்தில் 40க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். இம்மையம் தாழ்வான பகுதியில் உள்ளதால் மழை பெய்ததும் கிராமத்தின் பல பகுதிகளிலிருந்து மழை நீர் மையத்திற்குள் செல்வதால் அங்குள்ள அரிசி, மாவு உள்ளிட்ட பொருட்கள் நனைந்து வீணாகின்றன.மேலும் மழை பெய்ததும் மையத்திற்கு விடுமுறை விடப்பட்டு மழை நீர் வடிந்த பிறகு மையம் செயல்படும். 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சிதிலமடைந்த கட்டடத்தில் மையம் செயல்படுவதால் பயத்துடனே குழந்தைகளை அனுப்புவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். மையத்திற்கு புதிய கட்டடம் வேண்டும் அதுவரை மழைநீர் மையத்திற்குள் புகாதவாறு வடிகால் அமைத்து தர வேண்டும் என்பதே பெற்றோர் எதிர்பார்ப்பாகும்.ஊராட்சி தலைவர் கிருஷ்ணன் கூறுகையில் மழைநீர் வடிகால் கட்டி தரக்கோரி யூனியன் அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளேன். அனுமதி கிடைத்ததும் கட்டப்படும் என்றார்.