விண்வெளி பூங்காக்கள் அமைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை
புதுடில்லி: விண்வெளி பூங்காக்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக, அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.விண்வெளி தொழில்நுட்பத் துறையில், மானிய விலையில் உற்பத்தி மற்றும் மேம்பாட்டிற்காக, பிரத்யேக தொழில்துறை பகுதிகளை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த முன்மொழிவை, இரு ஆண்டுகளுக்கு முன் மத்திய தொலைத் தொடர்புத்துறை, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட அமைச்சகங்களுக்கிடையேயான கூட்டத்தில், மத்திய அரசு முன்வைத்தது.வருகிற 2033ம் ஆண்டுக்குள் விண்வெளி தொடர்பான 93,500 கோடி ரூபாய் ஏற்றுமதி இலக்கை அடையும் நோக்கில், மத்திய அரசு மீண்டும் இதுகுறித்து ஆராய்ந்து வருவதாக சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோள் கூறுகள், ஏவுகணை வாகனங்கள் மற்றும் புவிசார் வழிகாட்டி மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் ஆகியவற்றின் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க, அரசு ஆர்வமாக உள்ளது.இதற்காக பி.எல்.ஐ., எனப்படும் உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டம் போன்ற திட்டங்கள் குறித்து, அரசு தற்போது எதுவும் திட்டமிடவில்லை. இருப்பினும், பிற திட்டங்கள் ஆராயப்பட்டு வருவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.