உள்ளூர் செய்திகள்

மாணவர்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை; அண்ணா பல்கலை உறுதி

சென்னை: அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக, பதிவாளர் விளக்கம் அளித்துள்ளார். அவர், அண்ணா பல்கலை எப்போதும் மாணவர்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை தருகிறது என கூறியுள்ளார்.அவரது அறிக்கை:சென்னை அண்ணா பல்கலைக்கழக, கிண்டி பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர், ராஜா அண்ணாமலைபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். மேற்படி புகாரில், மாணவி தனது ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தின் பின்புறம் பேசிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் இருவரையும் அச்சுறுத்தியதாகவும் பின்னர் அதே நபர்கள் தன்னுடைய நண்பரை தாக்கிவிட்டு தன்னை பாலியல் சீண்டலுக்கு முயன்றதாக மாணவி போலீஸ் ஸ்டேஷனில் டிசம்பர் 24ம் தேதி அன்று புகார் தெரிவித்துள்ளார்.இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் உரிய வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்கள். கோட்டூர்புரம் காவல் நிலைய உதவி ஆணையர் தலைமையில், ஆர்.ஏ.புரம் மகளிர் காவல் நிலையக் குழுவினருடன் வழக்கை தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக உள் புகார்க் குழுவினருக்கும் தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டு. குழுவின் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை உயர் அலுவலர்கள் அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். அதனடிப்படையில் பல்கலைக்கழக நிர்வாகம் காவல்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியாளர்கள் எப்போதும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைக்கழக அளவில் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.அண்ணா பல்கலைக்கழகத்தினைப் பொறுத்தவரை அனைத்து மாணவர்களின் பாதுகாப்பு எப்போதுமே முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து கைது செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை அலுவலர்கள் உறுதியளித்துள்ளனர். இவ்வாறு சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்