உலகின் பெரிய ஏ.ஐ., தரவு மையம் அமைக்கிறது ரிலையன்ஸ்
புதுடில்லி: ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு திறன்களை இந்தியாவில் மேம்படுத்தும் வகையில், குஜராத்தில் உலகின் மிகப்பெரிய தரவு மையத்தை அமைக்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திட்டமிட்டுள்ளது.கடந்தாண்டு அக்டோபர் மாதம் என்விடியா ஏ.ஐ., நிறுவன மாநாடு, மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. அதில் இந்தியாவில் ஏ.ஐ., உள்கட்டமைப்பை உருவாக்க, என்விடியா மற்றும் ரிலையன்ஸ் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.இதையடுத்து, தற்போது குஜராத்தில் உள்ள ஜாம்நகரில், உலகின் மிகப்பெரிய தரவு மையத்தை அமைக்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. உலகளாவிய ஏ.ஐ., தொழில்நுட்ப வல்லுனர்களுடன் போட்டியிடும் வகையில், இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுத் திறன்கைளை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கம் என, ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.மேலும், இத்திட்டத்தை செயலாக்கும் வகையில் ரிலையன்ஸ் நிறுவனம், என்விடியா நிறுவனத்திடம் இருந்து ஏ.ஐ., தொழில்நுட்பத்திற்கான செமிகண்டக்டர்களை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், இத்திட்டம் தொடர்பான அதிகாரபூர்வ விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.