நுழைவுத்தேர்வு வைத்து அட்மிஷன் கொடுக்காதீங்க: அமைச்சர் பேச்சு
கோவை: மெட்ரிகுலேஷன் பள்ளிகள் கல்விசார் குழு சார்பில், சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கும், பள்ளி முதல்வர்களுக்கும் விருது வழங்கும் விழா, கோவை இந்துஸ்தான் கல்லுாரி வளாகத்தில் நடந்தது.நல்லாசிரியர் விருது பெற்றவர்கள், 25 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றியவர்கள், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற காரணமாக இருந்தவர்கள் என, 3,500 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் விருது வழங்கி பேசியதாவது:கல்வித்துறையில் தமிழகம் செய்திருக்கும் சாதனைகளில், தனியார் பள்ளிகளுக்கும் முக்கிய பங்குண்டு. இடைநிற்றல் விகிதம் குறைவாக இருப்பதாக, மத்திய அரசே நம்மை பாராட்டுகிறது என்றால், அதில், மெட்ரிக் பள்ளிகளின் பங்கும் உள்ளது.தனியார் பள்ளிகளுக்கு ஒரு வேண்டுகோள். அறிவாளியான பிள்ளையை தான் படிக்க வைப்போம் என, நுழைவுத்தேர்வு வைத்து, அட்மிஷன் தராமல், எந்த குழந்தை வந்தாலும் சேர்த்துக் கொள்வோம்.வெற்றுத்தாளாக வரும் குழந்தைகளை கருத்து நிறைந்த புத்தகமாக மாற்றி அனுப்புவோம் என, ஒரு சவாலாகவே எடுத்து, அனைத்து குழந்தைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.