பள்ளி பாதுகாப்பு குழு உயர் நீதிமன்றம் கேள்வி
மதுரை: அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதா, இல்லையா என, தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.தேனி மாவட்டம், ஸ்ரீரங்கபுரம் வழக்கறிஞர் ஷப்னா தாக்கல் செய்த பொதுநல மனு:பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து மாணவர்களை பாதுகாக்க தலைமையாசிரியர்கள் தலைமையில் ஆசிரியர், பெற்றோர், ஆசிரியரல்லாத ஊழியர், பள்ளி நிர்வாக பிரதிநிதியை கொண்ட பாதுகாப்பு மற்றும் ஆலோசனை குழுக்களை அமைக்க தமிழக அரசு, 2021ல் அரசாணை வெளியிட்டது.இதன்படி, போக்சோ சட்டம் குறித்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதை சரியாக நடைமுறைப்படுத்துவதில்லை.கடந்த, 2021- 22ல் குழுக்கள் அமைக்கப்பட்டாலும் மீண்டும் அவ்வப்போது மறு சீரமைப்பு செய்வதில்லை. குழுக்கள் சரியாக செயல்படுவதில்லை. சில பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கின்றன.அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் ஆலோசனை குழுக்களை அமைக்க வலியுறுத்தி தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலர், இயக்குனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ். ஸ்ரீமதி அமர்வு, பாதுகாப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதா, இல்லையா என பள்ளிக் கல்வித்துறை செயலர், இயக்குனர் மார்ச் 25ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.அண்ணாமலை கடும் தாக்குஅனைத்து பள்ளிகளிலும், உளவியல் மையங்கள் அமைக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:திருப்பத்துார் அரசு பள்ளி ஏழாம் வகுப்பு மாணவியர், அந்த பள்ளி ஆசிரியரால், பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட, செய்தி வெளிவந்துள்ளது. தமிழகம் முழுதுமே, கடந்த சில ஆண்டுகளாக, பள்ளி மாணவியர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவது, தொடர் கதையாகி இருக்கிறது.அனைத்து பள்ளிகளிலும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது போல், உளவியல் மையங்கள் அமைக்க வேண்டும். மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும்படி, பள்ளிகளில் தகுதி பெற்ற, உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும்.பகுதி நேர பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தன் பதவியின் பொறுப்பை இனியாவது உணர்வாரா?இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.