அன்பைக் கொடுப்பவர்களே ஆசிரியர்கள் கருத்தரங்கில் நடிகர் தாமு புகழாரம்
பல்லடம்: பெற்றோரை விட பத்து மடங்கு அன்பு காட்டுபவர்களே ஆசிரியர்கள் என சினிமா நடிகர் தாமு, ஆசிரியர்களுக்கு புகழாரம் சூட்டினார்.பல்லடம் வனம் இந்தியா அறக்கட்டளை சார்பில், 'வெற்றியை நோக்கி' எனும் கருத்தரங்கம், வனம் அடிகளார் அரங்கில் நேற்று நடந்தது. நிறுவனர் சுந்தரராஜ் தலைமை வகித்தார். வனம் அமைப்பு நிர்வாகிகள் சின்னசாமி, பாலசுப்பிரமணியம், ஈஸ்வரமூர்த்தி, விஸ்வநாதன் மற்றும் நாச்சிமுத்து உள்ளிட்டோர் முன்னிலை வசித்தனர்.சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நடிகர் தாமு பேசியதாவது:மாணவர்களாகிய நீங்கள், பள்ளியில், ஆசிரியர்கள் சொல்வதை கேட்கும் திறமை வந்துவிட்டால் போதும் நீங்கள் எளிதில் வெற்றி பெற்று விடலாம். எனவே, பள்ளி ஆசிரியர்களுடன் நீங்கள் ஒன்றிணைந்து விட வேண்டும். வாழ்க்கையில் கிங் ஆக வேண்டும் என்றால், ஸ்மோகிங், டிரிங்கிங் என, இரண்டையும் அருகிலேயே சேர்க்க கூடாது. வெற்றி என்பது தொடர்ந்து நடப்பதாக இருக்க வேண்டும்.வாழ்க்கையில் இரண்டு நாட்கள் மிக முக்கியம். ஒன்று பிறந்த நாள்; மற்றொன்று எதற்காக பிறந்தோம் என்பதை உணரும் நாள். வெற்றி பெற்றதாக கனவு காணுங்கள் அதுவே வெற்றிக்கு வித்திடும் என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியுள்ளார். ஆசிரியர் சொன்னாலும், சபித்தாலும் நடக்கும். ஆசிரியர் சொல்வது நேர்மறையாக இருக்க வேண்டும்.ஆனால், அவர்கள் சபித்து விட்டால் வெற்றி பறிபோய்விடும். பெற்றோரை விட பத்து மடங்கு அன்பு கொடுப்பவர்கள்தான் ஆசிரியர்கள். எனவே தான், ஆசிரியர்கள் என்பவர்கள் புத்தகத்தை சொல்லிக் கொடுப்பவர்கள் அல்ல; அவர்கள், இதயத்தை, அன்பை பற்றி சொல்லிக்கொடுப்பவர்கள் ஆவார்கள். எனது வெற்றி பயணத்தை துவக்கி வைத்தவர்களும் ஆசிரியர்கள் தான். இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற திருப்பூர் ஏ.கே.ஆர்., பள்ளி மாணவி ஸ்ரீமதி, கண்ணம்மாள் பள்ளி ராகுல் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.