உள்ளூர் செய்திகள்

மீண்டும் பள்ளிக்கு போகலாம்! அதற்கேற்ப குழந்தைகளை பழக்கணும்!

கோவை: கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்ல தயாராகும் நேரத்தில், அவர்கள் நடத்தை மற்றும் மனநிலைகளில் ஏற்படும் மாறுதல்களை பெற்றோர், கவனிக்க வேண்டும் என, உளவியல் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.மாணவர்கள் சுமார் ஒரு மாத காலமாக பள்ளிக்கு செல்லாமல், வீட்டிலேயே இருந்ததால், அவர்கள் இயல்பு வாழ்க்கை முறையில், மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்.விளையாட்டு, ஓய்வு, கட்டுப்பாடின்றி டிஜிட்டல் ஊடகங்களை பயன்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த குழந்தைகள், மீண்டும் ஒரு கட்டுப்பாட்டு சூழலுக்கு, திரும்பிச் செல்வது சவாலாக இருக்கலாம்.இதனால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்புவது குறித்து, உளவியல் ஆலோசகர் பாலமுருகன் கூறியதாவது:ஒரு மாதம் முழுவதும் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்ததால், குழந்தைகள் தங்களுக்கே உரிய ஒரு தனி உலகத்தில் இயங்கி இருப்பார்கள். இதில் அவர்களின் மன ஆரோக்கியம், உடல்நலமும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும்.அதிக சுதந்திரம், விளையாட்டு மனோபாவம், தூங்கும் நேரத்தில் மாற்றங்கள்; இவையெல்லாம் பள்ளி மாணவரின் ஒழுக்கத்தில் தாக்கம் ஏற்படுத்தக்கூடும்.எனவே, பெற்றோர் முன்னெச்சரிக்கையாக நடந்து, தங்கள் குழந்தைகளிடம் பள்ளி நேரத்தை முன்கூட்டியே நினைவூட்ட வேண்டும். காலையில் எழும் பழக்கம், கட்டுப்பாடுள்ள உணவு பழக்கம், படிப்புக்கான நேர ஒழுங்கு ஆகியவற்றை, மெதுவாக நடைமுறைப்படுத்த வேண்டும்.குழந்தைகள் கோபம், ஏமாற்றம் அல்லது உளச்சுமை போன்றவற்றை வெளிப்படுத்தும் போதெல்லாம் கண்டிக்காமல், உரையாடலின் மூலம் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.விடுமுறையின்போது ஏற்பட்ட தூக்க மற்றும் உணவு பழக்கங்களை, மீண்டும் பள்ளி முறைக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும். பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், இப்போதிருந்து மாற்றங்களை மீண்டும் அமல்படுத்துவது சரியாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்