விண்வெளி ஆராய்ச்சிக்கு சென்றுள்ள தார்வாட் பாசிப்பயறு, வெந்தய விதைகள்
தார்வாட்: தார்வாட் விவசாய பல்கலையின் பாசிப்பயறு மற்றும் வெந்தய விதைகள், ஆக்சியம் - 4 திட்டத்துக்காக, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.இது தொடர்பாக, தார்வாட் விவசாய பல்கலை துணை வேந்தர் பி.எல்.பாட்டீல் அளித்த பேட்டி:அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்ட, ஆக்சியம் - 4 திட்டத்துக்கான விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்துள்ளது. அங்கு சென்றுள்ள நம் வீரர் சுபான்ஷு சுக்லா, தார்வாட் விவசாய பல்கலையில் மேம்படுத்திய பாசிப்பயறு மற்றும் வெந்தய விதைகளை, ஆராய்ச்சிக்காக எடுத்துச் சென்றுள்ளார்.இந்த விதைகள் விண்வெளியில் விதைக்கப்படும். விண்வெளி வீரர்கள் தண்ணீர் ஊற்றுவர். இரண்டு முதல் நான்கு நாட்களில் முளைவிடும். முளைவிட்ட பயிர்களை, விண்வெளியில் உள்ள குளிர்பதன பிரிவில் வைத்து பாதுகாப்பர். அதன்பின் பூமிக்கு எடுத்து வருவர்.அவை, தார்வாட் பல்கலையில் ஆய்வு செய்யப்படும். எந்த அளவுக்கு முளைவிட்டுள்ளன, இவற்றின் ஊட்டச்சத்துகள் தரம், புரோட்டீன் உட்பட மற்ற விஷயங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும். பயிர்களில் உள்ள நுண்ணுயிர் வளர்ச்சியும் ஆய்வு செய்யப்படும்.விண்வெளி பயணம் மேற்கொண்டோருக்கு, ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், இவை அனுப்பப்பட்டன. விண்வெளி பயணத்தில் பயிர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா; இதை பயன்படுத்தலாமா, வேண்டாமா என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.