சிறப்பான சுதேசி சமூக வலைதளம்: ஸ்ரீதர் வேம்பு உறுதி
சென்னை: உலகின் சிறந்த செய்தி சமூக வலைதள அனுபவத்தை ' அரட்டை' செயலி மூலம் வழங்க உறுதிபூண்டுள்ளோம் என அந்த ஸோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.சமூக வலைதளங்களில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர், த்ரெட்ஸ், வாட்ஸ்அப், ஸ்நாப்சாட், யூடியூப் உள்ளிட்டவை உலகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்தியாவிலும் கோடிக்கணக்கானோர் இந்த செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர்.இதனிடையே உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சமூக வலைதளம் வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்தனர். சுதேசி பொருட்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என மத்திய அரசும் கோரிக்கை விடுத்தது.இந்திய தயாரிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக, டாக்குமெண்ட்ஸ், ஸ்ப்ரெட்ஷீட்ஸ் மற்றும் பிரசன்டேஷன் தயாரிக்க மைக்ரோசாப்டுக்கு பதிலாக இந்திய தளமான ஸோஹோவுக்கு மாறியதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார்.இந்நிலையில் ' மேட் இன் இந்தியா' தயாரிப்பாக ஸோஹோ நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு அறிமுகப்படுத்திய 'அரட்டை ' செயலியை பயன்படுத்தலாம் என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த செயலி தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதாலும், பல புதிய அம்சங்கள் காரணமாகவும் அது இந்திய பயனர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. முக்கிய பிரபலங்கள் இந்த செயலியை பயன்படுத்த துவங்கி உள்ளனர்.மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்ட அறிக்கையில், ஸோஹோ நிறுவனம் உருவாக்கிய அரட்டை செயலி இலவசம். பயன்படுத்த எளிதாக உள்ளது. பாதுகாப்பாக இருப்பதுடன் மேட் இன் இந்தியா தயாரிப்பாக இருக்கிறது. சுதேசியை ஏற்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் வழிநடத்துதலின்படி, அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செயலியில் இணைந்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் எனத் தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் ஸோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:இது எங்கள் பொறுமையான பொறியியல் அணுகுமுறையின் மற்றொரு எடுத்துக்காட்டு. குறைந்த விலை மொபைல்போன்கள், குறைந்த அலைவரிசை நெட்வொர்க்குகள், சிறந்த தனியுரிமை மற்றும் பாதுகாப்பை வழங்குவதாலும், அதே நேரத்தில் பயன்படுத்த மிகவும் எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் நேரத்தை எடுத்துக் கொண்டோம்.வாரந்தோறும் செயலியை விடாமுயற்சியுடன் புதுப்பித்து வருகிறோம். நீங்கள் எதிர்பார்க்கும் பல அம்சங்களுக்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம், இன்னும் ஒரு மாதத்தில், அதில் நிறைய விஷயங்கள் செய்யப்படும். உள்கட்டமைப்பிலும் நாங்கள் முதலீடு செய்கிறோம். இவை அனைத்தையும் பற்றி நான் தினமும் பொறியாளர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசி வருகிறேன்.அனைத்தும் சரியாகிவிட்டால், ஒரு பெரிய மார்க்கெட்டிங் இயக்கத்தை நாங்கள் தொடங்குவோம். அது உங்களுக்குப் பிடிக்கும்!உலகின் சிறந்த சமூக வலைதள அனுபவத்தை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.