கவனம் தேவை! காலநிலை மாற்றத்தால் சளி, இருமல் அதிகரிப்பு
நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டி உட்பட பல்வேறு பகுதிகளிலும் நடப்பாண்டு கோடை மழையை தொடர்ந்து தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்தது. விரைவில் வடகிழக்கு பருவ மழை துவங்குகிறது. கடந்த ஆறு மாதங்களில் ஊட்டி சுற்றுப்புற பகுதிகளில் சில நாட்கள் மட்டுமே வெயிலான காலநிலை நிலவியது. மற்ற நாட்களில், மழை, மேகமூட்டம், கடும் குளிராக காலநிலை நிலவி வருகிறது.நடப்பாண்டில் செப்., மாதம் இறுதி வரை, ஊட்டி உட்பட மாவட்ட முழுவதும் மாறுபட்ட காலநிலை நிலவியதன் காரணமாக, உள்ளூர் மக்களில் பலருக்கு சளி, இருமல், தலைவலி, காய்ச்சல் போன்ற நோய் பாதிப்புகள், குழந்தைகள் முதல் முதியோர் வரை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், பலரும் அவதி அடைந்து வருகின்றனர். பலரும் மருத்துவ மனைகளை நாடி, மாத்திரை, மருந்துகளுடன் நாட்களை கடத்தி வருகின்றனர்.மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புஇதன் விளைவாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து, பொது சுகாதார துறையினர் கூடுதல் கவனம் செலுத்தி, வீடு, வீடாக சென்று காய்ச்சல், இருமல் உள்ளவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களாக அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, 30 சதவீதம் அதிகரித்திருந்தது.அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டீன் சரவணன் கூறுகையில்,'' செப்., மாதம் நிலவிய கடும் குளிர் மற்றும் காலநிலை மாற்றத்தின் காரணமாக, பலருக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் அதிகரித்து உள்ளது. பாதிக்கப்பட்டோர் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று, பரிசோதனை செய்து சிகிச்சை பெற வேண்டும்.மேலும், நோய் பாதிப்புகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள குடிநீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டு, குளிரான தண்ணீரை பருக கூடாது. சூடான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சிகிச்சைகளும் தயார் நிலையில் உள்ளது. குறிப்பாக, குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் உடனே வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள்,'' என்றார். 'மாஸ்க்' பயன்படுத்த அறிவுரை சுகாதார துறை துணை இயக்குனர் சோமசுந்தரம் கூறுகையில்,''ஆயுதபூஜை, பள்ளி விடுமுறை காரணமாக, வரும் ஒரு வாரத்துக்கு, நீலகிரி மாவட்ட சுற்றுலா மையங்களில், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும். இதனால், உள்ளூரில் காய்ச்சல், இருமல் இருப்பவர்கள், மருத்துவ சிகிச்சை எடுப்பதுடன், 'மாஸ்க்' பயன்படுத்தினால், நோய் பாதிப்பு அதிகமாகாமல் இருக்கும். குறிப்பாக, குழந்தைகளை கடும் குளிரில் மாலை, இரவு நேரங்களில் வெளியில் அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். கூட்டம் அதிகம் உள்ள பகுதிகளுக்கு செல்வதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.