அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பயிற்றுநர்கள் நியமிக்க கோரிக்கை
கோவை: அரசு உதவிபெறும் பள்ளிகளில் எமிஸ் மற்றும் யூ-டைஸ் உள்ளிட்ட இணையதள பணிகளை கையாள்வதற்கும், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை நிர்வகிப்பதற்கும் 'அட்மினிஸ்ட்ரேட்டர் கம் இன்ஸ்டிரக்டர்களை' (பயிற்றுநர்) நியமிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.பள்ளிக் கல்வித் துறையின் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) தளத்தில் அரசு, அரசு உதவி, மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் முழு விவரங்கள் பராமரிக்கப்படுகின்றன.இதன் அடிப்படையிலேயே நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதுடன், ஆசிரியர்களின் தினசரி செயல்பாடுகளும் கண்காணிக்கப்படுகின்றன.அதே சமயம், மத்திய அமைச்சகத்தின் 'யூ-டைஸ்' (கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை) தளத்திலும் மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால், ஆசிரியர்கள் கற்பித்தல் பணியை விடுத்து, இந்த இரு தளங்களிலும் தரவுகளைப் பதிவேற்றும் பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.இந்நிலையில், தற்போது அரசுப் பள்ளிகளைப் போலவே, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்க விவரங்கள், சேகரிக்கப்பட்டு வருகின்றன.எனவே, அரசுப் பள்ளிகளில் அண்மையில் நியமிக்கப்பட்ட பயிற்றுநர்களைப் போலவே, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் பயிற்றுநர்களை நியமித்தால், அவர்கள் எமிஸ், யூ-டைஸ் பதிவேற்றப் பணிகள் மற்றும் ஆய்வகப் பணிகளைக் கவனித்துக் கொள்வார்கள் என்றும், இதன் மூலம் கற்பித்தல் பணியில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியும் என்றும், ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.